Header Ads



அதீத சம்பளத்தில் சவூதிக்காக, விளையாடுவாரா மெஸ்ஸி..? கால்பந்து உலகில் பரபரப்பு


போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பின்பற்றி 2022 கால்பந்து உலகக் கோப்பையை வென்ற நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியும் சௌதி அரேபிய அணியில் சேரப் போவதாக வெளியான தகவலால் கால்பந்து உலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.


மெஸ்ஸிக்கு ஊதியமாக ஆண்டொன்றுக்கு 2,500 கோடி ரூபாய் வரை கொட்டிக் கொடுக்க சௌதி அரேபிய அணிகள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கால்பந்து உலகில் கடந்த இரு தசாப்தங்களாக ரொனால்டோ - மெஸ்ஸி இடையே நீடிக்கும் மோதல் வெகு பிரசித்தம். இருவரும் எதிரெதிர் அணிகளுக்காக ஆடும் ஆட்டங்களில் அனல் பறக்கும். குறிப்பாக, ரியல் மேட்ரிட் அணிக்காக ரொனால்டோவும் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸியும் எதிரெதிரே ஆடிய ஆட்டங்கள் மறக்க முடியாதவை.


இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களும் அந்தப் போட்டிகளை எதிர்பார்த்து தவம் கிடப்பது உண்டு.


கால்பந்து வாழ்க்கையில் ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடிய போது உச்சம் தொட்ட ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட், யுவெண்டஸ் உள்ளிட்ட பல அணிகளுக்காக ஆடியுள்ளார்.



கத்தாரில் அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக பெரிதாக சாதிக்காத ரொனால்டோ, தான் ஆடிய மான்செஸ்டர் யுனைடெட் கிளப் நிர்வாகத்திற்கு எதிராகப் பேசியதன் விளைவாக அந்த அணியிலிருந்து வெளியேறினார். தற்போது 37 வயதை எட்டிவிட்ட ரொனால்டோ, அதன் தொடர்ச்சியாக அண்மையில் சௌதி அரேபியாவை சேர்ந்த அல்-நாசர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் வாங்காத வகையில், ஆண்டுக்கு சுமார் 1,800 கோடி ரூபாயை அவருக்கு ஊதியமாக அல்-நாசர் அணி அள்ளிக் கொடுத்துள்ளது.


சௌதி அரேபியாவில் ரொனால்டோ களமிறங்குவதை வளைகுடா பிராந்திய கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.


ரொனால்டோ - மெஸ்ஸி மோதலை சௌதி அரேபிய லீக்கில் நிரந்தரமாக்கும் முயற்சிகளும் ஒருபுறம் நடப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சௌதி லீக்கில் ரொனால்டோ விளையாடப் போகும் அல்-நாசர் அணிக்குச் சவாலாக இருக்கும் அல்-ஹிலால் அணி மெஸ்ஸியை வாங்க ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதற்காக, ரொனால்டோவை விஞ்சும் வகையில் ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வரையிலும் மெஸ்ஸிக்கு ஊதியமாக வாரியிறைக்க அந்த அணி தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பார்சிலோனா அணியிலேயே ஜூனியராக சேர்ந்து, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிவிட்ட லியோனல் மெஸ்ஸி, 2021ஆம் ஆண்டு அந்த அணியிலிருந்து விலகி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் சேர்ந்தார். அந்த அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருவதால், அவர் சௌதி அணியில் சேரக் கூடும் என்ற செய்தி வெளியானதுமே கால்பந்து உலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டு விட்டது.


ஒட்டுமொத்த ஊடகங்களின் கண்களும் இப்போது மெஸ்ஸியையே பின்தொடர்கின்றன. மெஸ்ஸியின் ஏஜென்டும், அவரது தந்தையுமான ஜார்ஜ், சௌதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், மெஸ்ஸி ஒப்பந்தம் குறித்து அல்-ஹிலால் அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.


மெஸ்ஸி - ரொனால்டோ மோதலை சௌதி லீக் வாயிலாக மீண்டும் காணும் வாய்ப்பு கிடைக்குமோ என்று கால்பந்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஸ்பெயினை சேர்ந்த கிலியம் பலேகெ என்ற கால்பந்து நிபுணர், அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார். மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய சௌதி கிளப்பான அல்-ஹிலால் அணுகவே இல்லை என்கிறார் அவர். அதோடு, 35 வயதை எட்டியுள்ள மெஸ்ஸி ஐரோப்பிய கால்பந்தில் இன்னும் சாதிக்க முடியும் என்று நம்புவதால் சௌதி கிளப்கள் அணுகினாலும் அதைப் பரிசீலிக்கும் எண்ணத்தில் அவர் இல்லை என்றும் கிலியம் பலேகெ தெரிவித்துள்ளார்.


"அர்ஜெண்டினாவுக்காக உலகக்கோப்பையை வென்றுள்ள மெஸ்ஸி, பேலோன் டோர் விருதுக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார். அத்துடன், உலகக்கோப்பைக்கு அடுத்தபடியாக கிளப் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த சாம்பியன் லீக் கோப்பைக்கும் அவர் குறிவைத்துள்ளார். அவர் இடம் பெற்றுள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி அந்தக் கோப்பைக்கான போட்டியில் நீடிக்கிறது," என்று அவர் குறிப்பிடுகிறார்.


அல்-ஹிலால் அணி எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் முன்மொழிவு செய்யாத நிலையில், ரொனால்டோவை பின்தொடர்ந்து மெஸ்ஸியும் சௌதி அரேபியா செல்வார் என்ற கூற்றில் முகாந்திரமே இல்லை என்பது அவரது வாதம்.


அதேநேரத்தில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக மெஸ்ஸி விளையாடும் கால அளவை நீட்டிக்கும் ஒப்பந்தம் இன்னும் சில வாரங்களில் கையெழுத்தாகும் என்றும் கிலியம் பலேகெ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.