அமீர் அஜ்வத் எழுதிய "இலங்கை - ஓமான் உறவுகள்" நூல் வெளியீடு
லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கை நிறுவனத்தினால் இலங்கை வெளிவகார அமைச்சு மற்றும் இலங்கையிலுள்ள ஓமான் நாட்டுக்கான தூதரகத்தின் அனுசரனையுடன் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருனி விஜயவர்தன, இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹ்மத்அலி அல் றஷ்தி மற்றும் நூலாசிரியர் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோர் இணைந்து நூலை உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைத்தனர்.
நூல் வெளியீட்டு விழாவின் ஆரம்ப உரையை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்கள் நிகழத்தினார். அவர் தன் உரையின் போது வேலைப்பழுமிக்க தனது தூதரகப் பணிகளுக்கு மத்தியிலும் நூல் எழுதும் சிரம்மான பணியை மிகச்சிறப்பாகச் செய்துள்ள நூலாசிரியரைப் பாராட்டினார். இலங்கைக்கும் ஓமானுக்குமிடையிலான நேரடி கடல் போக்குவரத்து தொடர்பில் நூலாசிரியரின் முன் மொழிவுகளின் சாத்தியத்தை வலியுறுத்தினார்.
இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹ்மத் அலி அல் றஷ்தி தனதுரையில் நூலாசிரியரின் இந்த பயனுள்ள முயற்ச்சி ஓமான் - இலங்கைக்கான ஓர் உறவுப் பாலமாக அமையும் என்றார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நூலாசிரியரின் இந்த முயற்ச்சி ஓர் முன்மாதிரியானதும் எதிர்கால தூதுவர்களுக்கு இந்நூல் ஓரு வளிகாட்டியாகவும் அமையும் என்றார். மத்திய கிழக்கு நாடுகளுடனான மிக நீண்டகால உறவை மேலும் மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமைக் கொள்கைகளில் ஒன்றாகும் என வலியுறுத்தினார்.
இலங்கையின் தனியார் துறையை பிரதிநிதித்துவப் படுத்தி விழாவில் உரையாற்றிய தேசிய வர்த்தக சபையின் தலைவர் நன்திக புத்திபால இலங்கையின் தனியார் துறையுடன் ஓமானின் தனியார் துறையை இணைப்பதிலும் இருதரப்பு விஜயங்களை ஒழுங்கு செய்வதிலும் சிறந்த பங்களிப்புச்செய்த நூலாசிரியர் அமீர் அஜ்வத் அவர்களின் முயற்சியைப் பாராட்டியதோடு இந்நூல் தனியார் துறைக்கு ஒரு கையேடாக அம்மையும் என்றார்
சர்வதேச அரசியல் மற்றும் ஊடகத்துறை ஆய்வாளருமான கலாநிதி ரங்க கலான்சூரிய நூல் மீளாய்வு உரையை நிகழ்த்தினார். அவர் தனதுரையில் இலங்கைக்கும் அறபு உலகத்துக்குமிடையிலான தொன்று தொட்ட உறவை அழகிய முறையில் மீட்டிக் காட்டி எதிர்கால உறவுக்கு பலமான அத்திவாரத்தை இடுவதற்கான ஒரு முற்போக்கு நூலாக இது அமைந்துள்ளது என்றார்.
40 ஆண்டுகால இலங்கை -ஓமான் இராஜதந்திர உறவுகளைக் நினைவுகூருமுகமாக ஓமான் வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர கற்கை நிறுவனத்தில் இந்நூலின் முதல் பிரதி கடந்த ஆண்டு ஓமானில் வெளியிடப்பட்டது.
ஐந்து பாகங்களை உள்ளடக்கிய இந்நூலின் முதற்பகுதி கிறிஸ்த்துவுக்கு முன்னபிருந்தே அறபு உலகுடன் இலங்கை கொண்டுள்ள வராற்றுத் தொடர்புகளை ஆராய்வதோடு ஓமான் நாட்டுடனான இலங்கையின் இறுக்கமான உறவுகளையும் எடுத்துரைக்கிறது.
இலங்கை - ஓமான் உறவுகள் பற்றி முதன் முதலில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூல் இரு நாடுகளுக்கிடையில் பயன் தரக்கூடிய நல்லுறவை வளர்ப்பதில் ஒரு இராஜதந்திரியின் சொந்த அனுபவத்தையும் வெற்றி பெற்ற முயற்ச்சிகளையும் மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமான வாய்ப்புகளையும் பதிவு செய்கிறது.
இந்நூலின் ஐந்தாம் அத்தியாயம் இரு நாடுகளுக்கிடையிலான எதிர்கால பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான காத்திரமான யோசனைகளையும் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்குத்தேவையான தகவல்களையும் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டுத் துறைகளில் இரு நாடுகளிலும் காணப்படும் பல்வேறு வாய்ப்புக்கள் மற்றும் அவை தொடர்பாக தொழில் வல்லுனர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நூலாசிரியர் அமீர் அஜ்வத் இவ்வத்தியாயத்தில் பதிவுசெய்துள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.
“இலங்கை - ஓமான் உறவுகள்: நேற்று, இன்று, நாளை” என்ற இந்த நூலுக்கான முன்னுரையை ஓமான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் செய்யத் பத்ர் அல் புசைதி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூல் வெளியீட்டுவிழாவில் இலங்கையிலுள்ள மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள், முன்னாள் இலங்கைத் தூதுவர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள், தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.
manas hussain
Post a Comment