ஆப்கானிஸ்தானை வாட்டும் குளிரில் 78 பேர் உயிரிழப்பு, 77,000 கால்நடைகள் உறைந்து பலி
மனித உயிரிழப்புகள் தவிர கடந்த சில நாட்களில் 77,000க்கும் அதிமான கால்நடைகள் குளிரில் உறைந்து பலியாகி இருப்பதாக தலிபான்களின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பேச்சாளர் ஷபியுல்லா ரஹிமி தெரிவித்துள்ளார்.
தலைநகர் காபுல் மற்றும் பல மாகாணங்களில் கடந்த ஜனவரி 10 தொடக்கம் வெப்பநிலை மைனஸ் 33 செல்சியஸ் வரை குறைந்து காணப்படுகிறது. “இந்த குளிர்காலம் அண்மைய ஆண்டுகளை விடவும் குளிரானது” என்று ஆப்கான் வானிநிலை ஆய்வு நிலையத் தலைவர் முஹமது முராதி குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புறங்களில் இருக்கும் வீடற்ற குடும்பங்கள் தீமூட்டி குளிர்காய்வதோடு தலைநகரில் வசதி படைத்த குடும்பங்கள் வெப்பமேற்றும் கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் இந்த குளிர் நீடிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக முராதி குறிப்பிட்டுள்ளார்.
கடும் பனிப்பொழிவால் பல மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் வீதிகள் தடைப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2021 ஓகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து ஆப்கானில் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment