72 பேருடன் சென்ற விமானம் விபத்து – உடல்கள் மீட்பு
நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிராவுலா, விமானப் பயணிகளில் 53 நேபாள குடிமக்களும் 5 இந்தியர்களும் இருந்ததாகக் கூறினார்.
ரஷ்யாவை சேர்ந்த 4 பயணிகள், கொரியாவிலிருந்து இரண்டு பயணிகள் மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பயணியும் இருந்ததாகக் கூறினார்.
நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிருலா, மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாகக் கூறினார்.
“தற்போது கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது,” என்று அவர் கூறினார்.
ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, 72 இருக்கைகளைக் கொண்ட பயணிகள் விமானம் போக்கரா சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விமானத்தில் மொத்தம் 68 பயணிகள், 4 பணியாளர்கள் இருந்ததாக காத்மண்டு போஸ்ட் பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. எட்டி ஏர்லைன்ஸின் இந்த விமானம் பழைய விமான நிலையத்திற்கும் போக்கரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விபத்திற்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 72 பேர் இருந்ததாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்துலா ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறுகையில், “விமானத்தில் 68 பயணிகளுடன் நான்கு பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் எத்தனை பேர் உயிர் பிழைத்தனர் என்பது இன்னும் தெரியவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி, “போக்கரா விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள செட்டி ஆற்றின் பள்ளத்தாக்கில் விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 120 ரேஞ்சர்களும் 200 ராணுவ வீரர்களும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” எனக் கூறினார்.
தரையிறங்கும்போது விமானம் விபத்திற்குள்ளானது. விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் புஷ்ப கமல் தஹால், அமைச்சர்கள் குழுவின் அவசர கூட்டத்தையும் கூட்டியுள்ளார்.
Post a Comment