ஐஸ் போதைப் பொருளின் பாதகம் - 62 வயது நாதிராவின் உயிரைப் பறித்த பணிப்பெண்
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
கொழும்பு – வெல்லம்பிட்டி லான்சியாவத்தையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூர கொலை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெல்லம்பிட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வயதான நாதிரா என்ற வயோதிபப் பெண்மணியே கழுத்து நெரிக்கப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வயோதிபப் பெண்மணியின் வீட்டில் வேலை செய்த முர்சிதா எனப்படும் சுமார் 32 வயதுடைய பணிப்பெண்ணே இந்தக் கொலையை செய்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொலையாளியான வீட்டுப் பணிப்பெண் வீட்டிலிருந்த பெருந்தொகையான தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டு தலைமறைவாகியுள்ளார். வெல்லம்பிட்டிய பொலிஸார் சந்தேக நபரைத் தேடிக்கண்டுப்பிடிப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பணிப்பெண் திஹாரிய பகுதியைச் சேர்ந்தவரென்றும், ஏற்கனவே திருமணம் செய்து கணவரைப் பிரிந்து வாழ்பவரெனவும், அவருக்கு மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு இப்பெண் இஸ்லாத்தை தழுவிய பெண்ணாவார்.
கொலை செய்யப்பட்ட வயோதிபப்பெண்மணி கொலன்னாவை பள்ளிவாசலின் செயலாளரும், கொலன்னாவை மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பொருளாளருமான எம்.ஜே.பெரோஸ் முஹம்மட்டின் சகோதரியுமாவார்.
எம்.ஜே. பெரோஸ் முஹம்மட்டை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
“கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் இஹ்ஸானியா அரபுக்கல்லூரியின் வைபவத்தில் கலந்து கொண்டிருந்தபோது எனது மனைவி அச்சம்பவத்தை எனக்கு தொலைபேசியூடாக அறிவித்தார். கொலை செய்யப்பட்ட எனது சகோதரி கொழும்பிலுள்ள வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு வெல்லம்பிட்டியில் வாடகை வீடொன்றிலே வாழ்ந்து வந்தார். வெல்லம்பிட்டிய வீட்டில் எனது சகோதரியும் அவரது மகள், மருமகன் மற்றும் பிள்ளைகளும் வாழ்ந்து வந்தார்கள்.
சம்பவம் நடந்த அன்று மகளும், மருமகனும் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். சகோதரியுடன் 8 வயதுக்கும் 10 வயதுக்குமிடைப்பட்ட மூன்று ஆண் பேரப்பிள்ளைகள் இருந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தியே எனது சகோதரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளியின் குடும்பத்தை ஏற்கனவே எனக்குத் தெரியும். அவள் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவள். இவர்கள் சேர்ந்து திட்டமிட்டே இந்தக்கொலையை செய்திருக்கிறார்கள்.
சந்தேக நபரின் (பெண்) சகோதரர் ஒருவர் எனது வியாபார நிலையத்தில் நீண்ட காலம் வேலை செய்தார். அவர் கடந்த 7 மாதங்களாக வேலையில் இல்லை. நான் அவருக்கு வீடொன்றும் நிர்மாணித்துக் கொடுத்துள்ளேன்.
சந்தேக நபரான பணிப்பெண் சில வாரங்களுக்கு முன்பே வேலை கேட்டு வந்து வேலையில் சேர்ந்தவர். திட்டமிட்டே இக்கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட எனது சகோதரியின் கணவர் பல வருடங்களுக்கு முன்பே வபாத்தாகிவிட்டார். அதன்பின்பு மகள் மருமகனுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தார். இவ்வாறான நிலையிலே இக்கொலை இடம் பெற்றுள்ளது என்றார்.
கொலையாளியான பெண்ணின் காதலர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருவரும் தொடர்ந்து தலைமறைவாகியிருக்கின்றனர். சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வெல்லம்பிட்டிய பொலிஸாரும் சி.ஐ.டியினரும் பொது மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்மணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே வபாத்தாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பெண்மணியின் ஜனாஸா நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெல்லம்பிட்டிய பொலிஸார் சந்தேக நபர்களைத் தேடி வலை விரித்துள்ளனர்.- Vidivelli
Post a Comment