60 ஆவது ஆண்டை பூர்த்தி செய்தது யாழ் ஒஸ்மானியா - வைரவிழா ஆண்டாக 2023 பிரகடனம்
1963.01.05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி 2023.01.05 இன்று தனது அறுபதாவது ஆண்டை பூர்த்தி செய்து வைரவிழாவை எட்டியுள்ளது. அந்த வகையில் வைரவிழாவுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 2023.01.05 ஆம் திகதி மௌலவி அப்துல் அஸீஸ் ஆசி உரையுடன் பாடசாலையின் பதில் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய பதில் அதிபர் ரவிச்சந்திரன் அவர்கள் “2023 ஆண்டை முழுமையாக யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் வைரவிழா ஆண்டாக பிரகடனம் செய்வதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்”. அத்துடன் வைரவிழா அறிப்பை இலட்சனை ஊடாக வெளியிட்டு அதனை பாடசாலை சமூகத்திற்கு கையளித்தார்.
அதிபர் அவர்கள் 2023 ஆம் ஆண்டை வைரவிழா ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு சார்பில் உரையாற்றிய பழைய மாணவர் சங்க செயலாளர் என்.எம்.அப்துல்லாஹ் வைரவிழாவுக்கான அறிமுகத்தை மையமாகக் கொண்டு கருத்து வெளியிட்டார்.
அவர் கருத்து வெளியிடுகையில் “2023 ஆம் ஆண்டு வைரவிழாவுக்கான நிகழ்ச்சித்திட்டங்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவினால் தீர்மானிக்கப்படும் என்பதையும், இந் நிகழ்ச்சித்திட்டங்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம், வெளிமாவட்டம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் உள்ள பழைய மாணவர்கள், ஆண்டு ரீதியான பழைய மாணவர் குழுக்கள், யாழ்ப்பாணம் முஸ்லிம் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக ஒழுங்குபடுத்தப்படும் என்பதையும் குறிப்பிட்டார். அத்துடன் வைரவிழாவுக்கான தனது வாழ்த்துக்களையும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்கழு சார்பில் பாடசாலை சமூகத்திற்கு தெரிவித்தார்.”
மேற்படி வைரவிழா அங்குரார்ப்பண நிகழ்வில் பாடசாலை பதில் அதிபர் திரு.எஸ்.ரவிச்சந்திரன் அவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்கு உறுப்பினர்களான ஜனாப்.என்.எம்.அப்துல்லாஹ், செல்வன் எஸ்.சசான், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
2023 - வைரவிழா தொடர்பான மாபெரும் அறிமுக நிகழ்வு பெற்றோர்களை உள்ளடக்கியதாக பாடசாலை - சமூக நிகழ்வாக விரைவில் பதில் அதிபர் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
தகவல்
ஊடகப்பிரிவு
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி.
2023.01.05
Post a Comment