Header Ads



கடன் வாங்க வேண்டாம், 5 விடயங்கள் தவிர்ந்த ஏனைய சகல செலவீனங்களையும் குறைக்கவும் - ஜனாதிபதி உத்தரவு


2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அமைச்சரவைக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் கொடுப்பனவுகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துச் செலவுகளையும் தற்போது திறைசேரிக்கு ஏற்பது கடினம் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரித் திருத்தங்களின் மூலம் வருமானம் ஈட்டத் திட்டமிடப்பட்டிருக்கும் வருமானங்கள் கிடைக்கும் வரை, அரசாங்க செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.


திறைசேரியால் முன்னுரிமை அளவுகோல்கள் அமைக்கப்படும் எனவும் அதுவரை சிறு செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தை விடுவிப்பது மட்டுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அரச நிறுவனங்களுக்கு கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், அதனை மீறும் எந்தவொரு அதிகாரியும் தனிப்பட்ட முறையில் செலவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

31.01.2023

No comments

Powered by Blogger.