எலிப்படை பகுதியில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது, ஒருவர் தப்பியோட்டம்
- எஸ்.சதீஸ் -
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவை எலிப்படை 12ம் இலக்க தேயிலை மலை காணியில் சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளாரென ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கைது சம்பவமானது 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம் பெற்றதாக ஹட்டன் குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகரும், பொறுப்பதிகாரியுமான பிரேமலால் தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம் பெற்று வந்த சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வு தொடர்பாக ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலுக்கு ஏற்ப, மேற்படி சுற்றிவளைப்பின் போதே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களால் மாணிக்க கல் அகழ்விற்காக பயன் படுத்தப்பட்ட உபகரணங்களையும் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட அனைவரும் பொகவந்தலாவை எலிப்படை கீழ் பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரால் அடையாளங் காணப்பட்டுள்ளது.
இதே வேளை பொகவந்தலாவை பொகவானை தோட்டப்பகுதியில் சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை கைது செய்து செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment