Header Ads



சவூதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட, அபுபக்கர் மௌலவிக்கும், மற்றும் 3 முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட அநியாயங்கள்


- ரஞ்சன் அருண் பிரசாத் -


இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹாசிம் தலைமையில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்படாத நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தினர் மீது அந்த காலப் பகுதியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.


பள்ளிவாசல்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை, ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தி, தீக்கிரையாக்கியிருந்தனர்.


அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை, தொடர்புப்படாத பலரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக முஸ்லிம் சமூகத்தினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.


நிரபராதியான தன்னை கைது செய்து, இன்று தனது குடும்பத்தையே நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சவூதி அரேபியாவில் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கெப்பத்திகொல்லாவை பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் மௌலவி, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.


''ஈடு செய்ய முடியாத பாதிப்புக்களை நான் எதிர்நோக்கினேன். மூன்று வருடங்கள் முழுமையாக நான் உள்ளே இருந்தேன். பிள்ளைகளின் கல்வி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றால், உங்களின் வாப்பா (அப்பா) பயங்கரவாதி என ஏனைய பிள்ளைகள் பேசியுள்ளார்கள். அது எனது பிள்ளைகளுக்கு பெரியளவில் பாதித்துள்ளது. அதனால், பாடசாலை செல்ல பிள்ளைகள் விரும்புவதில்லை. ஏனைய பிள்ளைகளை அவர்களது பெற்றோர் அழைத்து வரும் போது, எனது பிள்ளைகளை அவ்வாறு அழைத்து செல்ல யாரும் இருக்கவில்லை. நான் கைது செய்யப்படும் போது, மூத்த பிள்ளை 4ஆம் வகுப்பு, இரண்டாவது முதலாம் வகுப்பில் கல்வி கற்றார். அவர்களின் ஆரம்ப கல்வி முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது.


என் பிள்ளைகள் என்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். நான் சிறையில் அடைக்கப்பட்டமையினால், அந்த அன்பை இழந்து விட்டேன். அது ரொம்பவே கஷ்டமாக இருக்கின்றது. நான் கல்வி கூடமொன்றை நடத்தி வந்தேன். அதில் சுமார் 50 பிள்ளைகள் படித்துக்கொண்டிந்தார்கள். அவர்களின் முழு கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னிடம் படித்தமையினால், அவர்களை வேறு இடங்களுக்கு கல்வி கற்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. என்னிடம் படித்தமையினால், படித்த மாணவர்கள் தங்களையும் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஒழிந்திருந்தார்கள். அவர்களுக்கு வேறு கல்வி நிலையங்களுக்கு சென்று சேரக்கூட முடியாத நிலைமை ஏற்பட்டது. எங்களின் கல்வி நாசமாகியதற்கு நீங்கள் தான் காரணம் என அந்த பிள்ளைகள் என்னை வெறுப்பாக பார்க்கின்றார்கள். அதை பார்க்கும் போது, ஈடு செய்ய முடியாத கவலையாக இருக்கின்றது.


அதேபோன்று, என்னை பார்க்க உணவை எடுத்துக் கொண்டு வந்த எனது சகோதரி, வரும் போது மாரடைப்பு வந்து உயிரிழந்தார். சமுதாயத்தில் யார் பார்த்தாலும், பயங்கரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டதை போல இருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படும் வரை எங்களின் ஊரில் சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் பழகினோம். ஆனால், இப்போது பயங்கரவாதி போன்று வித்தியாசமாக பார்க்கின்றார்கள். தொடர்ந்தும் புலனாய்வு பிரிவினர் பின்தொடர்கின்றார்கள். அதனால், எங்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், எங்களின் முழு குடும்பமே சீரழிந்துள்ளது. இன்று நான் பாதி மனிதனாக இருக்கின்றேன். இருதய சத்திர சிகிச்சை தற்போது செய்து, மருத்துவமனையில் இருந்தே பேசுகின்றேன். எனது பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வியை சீரழித்து, என்னை பாதி மனிதனாக்கி, இன்று நிர்க்கதியாக்கியுள்ளனர். இதற்கு என்ன ஈடு கொடுக்க போகின்றார்கள்?. எனக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றமையினால், நான் தொடர்ந்தும் வழக்கிற்கு வருகைத் தர வேண்டிய நிலைமை காணப்படுகின்றது." என அபுபக்கர் மௌலவி கூறுகின்றார்.


தன்னை கைது செய்து, தீவிரவாதி போல காண்பித்தமையினால், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களை தான் எதிர்நோக்கியதாக ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தர்கா நகரைச் சேர்ந்த லெட்சுமன் அப்துல் சக்கூர் குறிப்பிடுகின்றார்.


''என்னை சந்தேகத்தின் பேரில் தான் கைது செய்தார்கள். நான் தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் இருந்ததனால், கைது செய்தார்கள். தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் தான் கைது செய்தார்கள். கைது செய்து, இரண்டு மாதங்கள் சிறை வைத்தார்கள். நான் ஒரு தீவிரவாதி மாதிரி காண்பித்தார்கள். நான் பாதிக்கப்பட்ட பிறகு பொருளாதார ரீதியில் பாரிய இழப்பு. இன்னும் என்னை குற்றவாளி போல சமூகம் பார்க்கின்றது. அது பெரியதொரு மனப் பிரச்சினையாக இருக்கின்றது. தொழில் ரீதியான பாதிப்புக்களும் இருக்கின்றது. இவர்கள் இந்த சம்பத்துடன் தொடர்பு இருக்காது என முகத்துக்கு முன்பு பேசினாலும், பின்புறத்தில் இன்னும் அவ்வாறான தவறாக கருத்துக்கள் பேசப்படுகின்றன" என லெட்சுமன் அப்துல் சக்கூர் கூறுகின்றார்


அரச தொழில் வாய்ப்பில் இருந்த தான், அநீதியான கைதின் ஊடாக தொழில் வாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை செய்யித் இப்ராயிம் முகமது அமீன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.


''தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தேன் என்ற ஒரு காரணத்தினால் நான் கைது செய்யப்பட்டேன். நாங்கள் தவ்ஹீத்தைச் சேர்ந்தவர்கள் என ஏனைய பிரிவினர் என்னை காட்டிக் கொடுத்தார்கள். அந்த காட்டிக் கொடுப்பின் பின்னர், எந்தவொரு காரணமும் கூறாமல் என்னை கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட என்னை ஒரு மாதம் போலீஸ் தடுப்பு காவலில் வைத்திருந்தார்கள். நான்கு மாதம் விளக்கமறியலில் வைத்தார்கள். நான் ஒரு கிராம உத்தியோகத்தர். என்னுடைய தொழிலை இல்லாது செய்தார்கள். எனக்கு கிடைக்க வேண்டிய எந்தவொரு சலுகையும் இன்று வரை கிடைக்கவில்லை. பொருளாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் இல்லை. இன்னும் கடனில் தான் வாழ்கின்றேன். தன்மானப் பிரச்னை காணப்படுகின்றது. இதுவொரு அநீயாய கைது. இதனால், எனது குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு பிறகு நான் விடுதலை செய்யப்பட்டேன். எனது தொழிலை மீள வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை நீதி கிடைக்கவில்லை." என செய்யித் இப்ராயிம் முகமது அமீன் கூறுகின்றார்.


ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் பல முஸ்லிம் அமைப்புக்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது.


இதன்படி, தமது அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த தடை நீக்கப்பட்டு, தமக்கான நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், சமூக செயற்பட்டாளருமான ரஷ்மின் மௌலவி தெரிவிக்கின்றார்.


"ஜனநாயக ரீதியில் இயங்கிய அமைப்பு தடை செய்யப்படும் போது, அந்த அமைப்பு மாத்திரம் பாதிக்காது. அதை சார்ந்திருக்கக்கூடிய சகோதரர்கள், எங்களின் கிளைகள், எங்களின் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளது. எங்களின் மத விவகாரங்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளன. இது நாங்கள் சந்தித்த மிக பெரிய பாதிப்புக்களில் ஒன்றாக இருக்கின்றது. அதை இன்றும் உணர்கின்றோம். நோன்பு காலத்தில் எங்களுக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்காது போயுள்ளன. இது எங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை. இதையெல்லாம் இழந்துள்ளோம். இதற்கு எல்லாம் நீதி கிடைக்க வேண்டும். கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இன்று நீதிக் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அழகான தீர்ப்பொன்றை அவர்களுக்கு வழங்கியுள்ளது. அதேபோன்று, எங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். எங்கள் மீதான தடையை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது" என சமூக செயற்பட்டாளர் ரஷ்மின் மௌலவி தெரிவிக்கின்றார்.


தமது சமூகத்தை சார்ந்த சட்டவல்லுநர்கள், தமது சமூகத்திற்காக நீதித்துறையின் தயவை நாடி இருக்கின்றார்களா என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல், பிபிசி தமிழிடம் கேள்வி எழுப்பினார்.


''இலங்கையில் கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், முஸ்லிம்களுக்கு பல விதமான பாதிப்புக்களும், பின்னடைவுகளும் காணப்படுகின்றன. இதில் மறைப்பதற்கு என்று எதுவும் இல்லை. கடந்த 4 அல்லது 5வருடங்களிலே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதான அழுத்தங்கள், தாக்குதல்கள், வன்முறைகள் போன்ற செயல்களால், இந்த சமூகம் பெரிதுமே பொருளாதார ரீதியிலும், மனோ ரீதியிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்." என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார். 

No comments

Powered by Blogger.