இலங்கையிலிருந்து ஹஜ் செய்ய 3500 பேருக்கு அனுமதி - வயது கட்டுப்பாடும் நீக்கம்
(ஏ.ஆர்.பரீல்)
ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக இவ்வருடம் இலங்கைக்கு சவூதி ஹஜ் அமைச்சினால் 3500 கோட்டா வழங்கப்படவுள்ளது. அத்தோடு வயதுக்கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
இவ்வருட ஹஜ் புனித யாத்திரை ஏற்பாடுகளை சுமுகமாக முன்னெடுப்பதற்கு ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டுள்ள மக்கள் இப்போதிலிருந்தே தயாராகுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச ஹஜ் குழுவின் தலைவர் இவ்வருட ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்; இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு வயதுக்கட்டுப்பாட்டினை சவூதி அரேபியா ஹஜ் அமைச்சு நீக்கியுள்ளது. கடந்த வருடம் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கே ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தோடு ஹஜ் முகவர்கள் பெற்றுக்கொள்ளும் முஅல்லிம் சேவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகள் முஅல்லிம் சேவை பெற்றுக் கொள்வது பரவலாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பிராந்திய அடிப்படையிலே ஹஜ் முகவர்கள் முஅல்லிம் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. இந்த பிராந்திய முறைமை நீக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்காக கடந்த காலங்களில் ஹஜ் பதிவுக்கட்டணமாக 25 ஆயிரம் ரூபா செலுத்தி பதிவு செய்து கொண்டுள்ள சுமார் 4000 விண்ணப்பதாரிகள் பட்டியலில் இருக்கிறார்கள். திணைக்களம் ஏற்கனவே பதிவு செய்து கொண்டுள்ள விண்ணப்பதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கும்.
அத்தோடு கடந்த வருடம் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொண்ட ஹஜ் முகவர் நிலையங்களுக்கு இம்முறையும் ஹஜ் ஏற்பாடுகளுக்கான முன்னுரிமை வழங்கப்படும். கடந்த வருட ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொண்ட ஹஜ் முகவர் நிலையங்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு திணைக்களத்தினை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார். – Vidivelli
Post a Comment