2 குழந்தைகளும், தாயும் தீயில் கருகி உயிரிழக்க காரணம் என்ன..???
நேற்று (26) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அசம்பாவித சம்பவத்தில் 30 வயதான வீட்டு உரிமையாளரின் மனைவி நிஷாந்தி ஹேமலதா, 10 வயதான ஜயரத்னகே ஹன்சகா பிரபோதனி, 5 வயதுடைய ஜயரத்னகே வினுஜ நவோத ஜயரத்ன ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரான 38 வயதான சமந்த ஜயரத்னகே எனும் முன்னாள் இராணுவ சிப்பாய் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டின் உரிமையாளரான முன்னாள் இராணுவ சிப்பாய் நேற்று முன்தினம் (26) மாலை தனது முச்சக்கர வண்டியின் தாங்கியிலிருந்து எடுத்த பெற்றோல் பூளியை படுக்கை அறையில் வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்து மின்சார வயர் மூலம் மின்சார சபையின் அனுமதியின்றி பக்கத்து வீட்டில் இருந்து மின்சாரம் பெறப்பட்டுள்ளதோடு, அதிலிருந்து ஏற்பட்ட மின் கசிவால் தீ ஏற்பட்டிருக்கலாம் என, இது குறித்து விசாரணை நடத்தி வரும் எலயாபத்துவ பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், இதய நோயாளி என கூறப்படும் வீட்டின் உரிமையாளர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தூங்கும் அறையை ஒட்டிய மற்றுமொரு அறையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தூங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இரவு 11.30 மணியளவில் அக்கம்பக்கத்து வீட்டார் உள்ளிட்ட சிலர் குறித்த வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்து, தீயை அணைப்பதற்காக உதவி கோரிய அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் தூக்கத்திலிருந்து எழுந்து தீயின் நடுவே எரிந்து கொண்டிருந்த மனைவி மற்றும் இரு குழந்தைகளை காப்பாற்ற முயன்ற நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் குறித்த மூவரும் உயிரிழந்து தீயில் கருகிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முற்பகல் (27) அநுராதபுரம் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தும் வரை தீயில் கருகி உயிரிழந்த தாய், மகள் மற்றும் மகனின் சடலங்கள் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அறையிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உயிரிழந்த மூவரின் பிரேதப் பரிசோதனைகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளை அழைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.புஷ்பகுமார மற்றும் அநுராதபுரம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாம ஆகியோரின் பணிப்புரையின் பேரில் எலயாபத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு: தயவு செய்து வீடுகளுக்குள் எரிபொருட்களை வைக்காதீர்கள்/ பாதுகாப்பு நடைமுறைகளை உரிய முறையில் பேணுங்கள்)
Post a Comment