சோகத்தில் ஆழ்த்திய 2 இளவயது மரணங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை (6) ஆம் திகதி ஏறாவூர் – மீராகேணி மையவாடி வீதியைச் சேர்ந்த ஹபீப் றிபத் எனும் 25 வயதுடைய இளைஞன் சவூதி நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்துள்ளார்.
ஏறாவூர் நகர சபையில் பணிபுரியும் ஜுனைதீன், ஆயிஷா தம்பதியின் மகனான ஹபீப் றிபத் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தொழில் நிமித்தம் சவூதி அல் மறாய் நிறுவனத்தில் வேலைக்காக சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவ்வாறு வேலைக்குச் சென்ற இவர் கடந்த 06.01.2023 ஆம் திகதி சவூதி நேரம் பிற்பகல் 5 மணியளவில் வாகன விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சவூதி விபத்தில் பலியான ஹபீப் றிபத்
குறித்த இளைஞன் தான் வேலை செய்யும் நிறுவன வாகனத்தில் சாரதியுடன் பயணித்துக்கொண்டிருந்த போது அங்கு இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.
அந்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இவ்வாறு மரணமடைந்த இளைஞன் ஹபீப் றிபதின் ஜனாஸாவை சவூதியிலேயே நல்லடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்த இளைஞனின் சகோதரர் ஒருவரும் சவூதி நாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், அவர் ஜனாஸாவை வைத்தியசாலையில் பொறுப்பேற்று நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாகவும் குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.
நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஹபீப் றிபத் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.
தான் பிறந்து வளர்ந்த ஏறாவூர் பகுதில் திருமணம் முடிப்பதற்காக வேண்டி திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையிலே இவ் இளைஞன் இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
அவர் இன்னும் இரண்டு வருடங்களின் பின்னர் நாட்டுக்கு வந்து திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாட்டில் இருந்ததாகவும் நண்பர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான சோகச் சம்பவம் நடைபெற்று மறுநாள் ஏறாவூர் மீராகேணி பகுதியில் மற்றுமொரு துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதுதான் கடந்த சனிக்கிழமை 7 ஆம் திகதி ஏறாவூர் சவுக்கடி கடலில் நீராடிய மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவமாகும்.
நீரில் மூழ்கி மரணித்த மனாப்தீன் அப்துர் ரஹ்மான்
ஏறாவூர் மீராகேணி ஹுதாப் பள்ளி வீதியைச் சேர்ந்த மனாப்தீன் அப்துர் ரஹ்மான் எனும் மாணவனே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்த மாணவனின் தந்தை சுமார் மூன்றரை வருடங்களின் பின்னர் மாணவன் மரணிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பே அதாவது வெள்ளிக்கிழமை (6) ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ளார்.
இவ்வாறு நாட்டுக்கு வந்த அவர் குடும்பத்துடன் சந்தோசமாக ஏறாவூர் சவுக்கடி கடலுக்கு சென்ற போதே இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்த மனாப்தீன் அப்துர் ரஹ்மான் எனும் மாணவன் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் கற்று வந்துள்ளார்.
இவர், இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கும் தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தந்தை, சகோதரர் ஆகியோருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த அப்துர் ரஹ்மான் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
அவருடன் நீராடிக் கொண்டிருந்த அவரது சகோதரர் உபைதுர் ரஹ்மானும் நீரில் மூழ்கி காப்பாற்றப்பற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நீரில் மூழ்கி மரணமடைந்த அப்துர் ரஹ்மானின் ஜனாஸா கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) காலை 10 மணியளவில் ஏறாவூர் காட்டுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு ஏறாவூர் மீராகேணி பகுதியில் இடம்பெற்ற இரண்டு இளைஞர்களின் திடீர் மரணம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரணமடைந்த இரு இளைஞர்களின் பாவங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து அவர்களுக்கு உயர்தரமான சுவனம் கிடைக்கவும், அவர்களின் பிரிவால் கவலையுடன் வாழ்ந்துவரும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் மன ஆறுதலை வழங்கவும் பிரார்த்திப்போமாக!- Vidivelli, எச்.எம்.எம்.பர்ஸான்
Post a Comment