விபத்தில் 2 பேர் வபாத், டாக்டர் முப்லிஹா உள்ளிட்ட 4 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை
- எஸ்.எம்.எம்.முர்ஷித் -
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (24.01.2023) மாலை புணானையில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிர் இழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வேனும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மகப்பேற்று விடுமுறையில் நின்ற பெண் வைத்தியர் தனது குடும்பத்துடன் சிலாபத்தில் இருந்து காத்தான்குடி வைத்தியசாலைக்கு தனது கடமையினை பொறுப்பெடுப்பதற்காக பயணித்த வேலையிலயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
விபத்தில் சாரதியாக வந்த புத்தளம் வீதி சிலாபத்தை சேர்ந்த எம்.எச்.மர்சூக் (வயது – 80) என்பவரும், வைத்தியரின் ஐந்து மாதம் மதிக்கத்தக்க ஆண் குழந்தையும் மரணமடைந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன் இவர்களில் 18 மாதங்கள் நிறம்பிய குழந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் ஏனைய நான்கு பேரும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
வைத்தியர் முப்லிஹாவும் (வயது 30) அவருடன் சேர்த்து நான்கு பேர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்குடா டைவர்ஸ் மற்றும் அகீல் அவசர சேவைப்பிரிவினரும் களத்தில் நின்று தம்மாலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment