இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 11 புதிய தூதுவர்கள் நியமனம்
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதரக சேவைக்காக செல்லும் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் 11 பேரை நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஏனைய வெளிநாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
முதலில் சிறந்த வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருப்பதும் இரண்டாவதாக நட்புறவைக் கட்டியெழுப்புவதும் தான் நமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
பொருளாதாரத் திட்டமிடல், பாதுகாப்பு நோக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை நாம் நிறைவு செய்ய வேண்டும். இந்த நோக்கங்களை அடைவது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திர பிரதானிகளின் செயல்திறனிலே தங்கியுள்ளது.
வெளிநாடுகளுடன் உறவுகளை வளர்த்து, அங்குள்ள இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் எமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். புலம்பெயர்ந்தோரின் அரசியல் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதில் அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய முடியும்.
2030 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு சேவை தொடர்பான வரைவை வெளிவிவகார அமைச்சு தயாரித்து வருகிறது. அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் பாராளுமன்றத்தின் ஒப்புதலையும் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகத் திணைக்களத்திற்குப் பதிலாக சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவுவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இது பல துறைகளில் காணப்படும் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து நமது பொருளாதாரத்திற்கு பலன்களை பெற்றுத்தரும். எனவே, இந்த செயல்பாட்டில் சர்வதேச வர்த்தக அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன்.
சம்பந்தப்பட்ட நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, சுற்றுலாவை மேம்படுத்துவது, விவசாய வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, பயிற்சிக்கான இடம்பெயர்வு, கல்வி மற்றும் கடல்சார் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்தும் இதன்போது ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சித்ராங்கனி வாகேஸ்வர, பிரான்ஸிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட மனீஷா குணசேகர, பஹ்ரைனுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட எச்.எம்.ஜி.ஆர்.கே. விஜேரத்ன மெண்டிஸ், வியட்நாம் தூதுவராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஏ.எஸ்.யு. மெண்டிஸ், ஜேர்மனிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வருணி முத்துக்குமாரண, லெபனானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கபில ஜயவீர, இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எச்.எம்.என். பண்டார, இத்தியோப்பியாவின் தூதுவராக நியமிக்கப்பட்ட கே.கே.டி. குமாரசிறி, ஜோர்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கிகா விஜேகுணசேகர, பிலிப்பைன்ஸிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சானக எச். தல்பஹேவா, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள உதய இந்திரரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, சர்வதேச உறவுகள் தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, நிலைபேரான அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
05.01.2023
Post a Comment