Header Ads



தேசியப் பட்டியல் Mp எமக்கு வேண்டும் - வேலுகுமார்


"ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


குறித்த அறிக்கை 


கடந்த 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலில் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஏகோபித்த அரசியல் கூட்டணியாக தமிழ் முற்போக்கு கூட்டணி மீண்டும் மலையக மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.


அதன் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தது.


அத்தேர்தலில், "தேசிய பட்டியலில் இருந்து ஒரு பிரதிநிதித்துவம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கப்படும்" என்ற உறுதி அளிக்கப்பட்டிருந்தது.


எனினும், பல்வேறு காரணங்கள் காட்டி தேசிய பட்டியல் உறுப்புரிமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கப்படவில்லை.


எனினும் எதிர்காலத்தில் வெற்றிடம் ஒன்று வருகின்ற போது, அதனை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. தற்போது, தேசிய பட்டியலில் வெற்றிடம் ஒன்று உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின், ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் அந்த தேசிய பட்டியல், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும்.


கடந்த பொது தேர்தலில், தமிழ் முற்போக்கு கூட்டணி 8 மாவட்டங்களில் போட்டியிட்டிருந்தது. அதன் போது 4 மாவட்டங்களில் இருந்து 6 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


அதே வேலை ரத்தினபுர, கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அதிகபட்சமான வாக்குகள் பெறப்பட்டிருந்தது. வரலாற்றில் முதல் தடவையாக, ரத்தினப்புரி மாவட்டத்தில் இருந்து 36,000 க்கு அதிகமான வாக்குகளை தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்ப்பாளர் பெற்றிருந்தார்.


கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 20,000 க்கும் அதிகமான வாக்குகள் பெறப்பட்டிருந்தது.


பிரதிநித்துவம் கிடைக்கப்பெறாத மாவட்டங்களில் நாம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் மூலம் நேரடியாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பயனடைந்துள்ளார்கள்.


அந்த வகையில் தேசிய பட்டியலில் இருந்து எமக்கு ஒன்றல்ல, இரண்டு பிரதிநித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் இருந்த பல்வேறு காரணங்கள் அதனை பெறுவதில் தடையை ஏற்படுத்தி இருந்தது.


எனினும், அந்நிலைமைகள் தற்போது மாற்றமடைந்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பங்காளி கட்சியாக உள்ளது. அந்த வகையில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான முழு உரிமையும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உள்ளது.


அதே போன்று அதனை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது.

No comments

Powered by Blogger.