முஸ்லிம்கள் தனித் தரப்பாக செல்வதே ஆரோக்கியமானது - முஷரப் வலியுறுத்து
இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் தரப்பு தமிழ் தரப்புடன் இணைந்து செல்ல வேண்டியதில்லை. முஸ்லிம்கள் தனித் தரப்பாக செல்ல வேண்டியதே அவசியமென எம்.முஷரப் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் தரப்பு தனியாகவும் மலையக தரப்பு தனியாகவும் பேச்சுவார்த்தைக்கு சென்று, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிறந்ததென்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ் தரப்புடன் முஸ்லிம் தரப்பு ஒரு குழுவாகவே கலந்து கொண்டது. அந்த குழு மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், இனிவரும் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பு தனியாக செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. முஸ்லிம் தரப்பு தனியாக சென்று அவற்றுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தமிழ்த் தரப்பினர் மூன்று நிலைப்பாட்டிலிருந்து கொண்டு அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைக்கு செல்லாது அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டுடன் அதில் கலந்து கொள்வது அவசியமென்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சி.வி. விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என மூன்று தரப்புகளாக பிளவுப்பட்டுள்ளதால் அவர்கள் ஒன்றிணைந்த நிலைப்பாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது சிறந்ததென்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற சேர் பெறுமதி வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
கல்வி அறிவு,ஞானம், அரசியல் அனுபவம் எதுவும் இல்லாத வெறும் ஆள்பார்வை சூன்யங்கள் இப்படித்தான் பேசும். இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் (மலைநாடு,வடக்கு,கிழக்கு) எந்த வேறுபாடுமின்றி, முஸ்லிம்கள் ( இந்த நாட்டில் பரந்து வாழும் அனைத்து முஸ்லிம்களும்) ஒன்றுபட்டு ஒரே கருத்தில் தமிழ்பேசும், கலாசாரத்தால்,மதத்தால் வேறுபட்ட இனங்கள் என்ற தொனியில் ஒரே குரலாக இந்த இரு இனங்களையும் பாராளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்தினால் மாத்திரம் இந்த நாட்டில் எதிர்காலத்தில் இரு இனங்களும் வாழமுடியும். அதைவிட்டு இனங்கள் தனியாகப் பிரிந்தால் பதவிஆசை வெறிமிக்க அரசியல் வங்கரோத்துக்காரன்களுக்கு அது ஒன்றே மிகவும் சாதகமாக அமையும். அதற்கு மிகவும் அண்மையில் உள்ள ஒரு உதாரணம் மட்டும் போதுமானது. சரிபிழைகள் இருந்தபோதிலும் இந்த நாட்டில் அரசியலில் தனியிடத்தைப் பெற்றிருந்த ஐ.தே.க. இப்போது இரண்டாகப் பிரிந்து இருப்பது தற்போது சஜித்தை எல்லாவகையிலும் மட்டந்தட்டி கட்சியைக் கூறுபோட்டு ரணிலின் சுயநலத்தைச் சாதிக்க நல்ல சந்தர்ப்பமாகிவிட்டது. மிக அண்மைக்காலத்தில் சஜித்தும் அவருடைய கட்சியும் இல்லாமல் போகும் என்பதற்காக சகல அறிகுறிகளும் தென்பட்டுவருகின்றது. காரணம் என்ன? கட்சி இரண்டாகப் பிரிந்தது தான். ஒன்றாக இருந்திருந்தால் ஒருபோதும் இலகுவாக விளையாடமுடியாது.
ReplyDelete