பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ரணில் பின்பற்றுகிறார்
இந்தியாவின் த ஃப்ரொன்ட்லைன்(Frontline) சஞ்சிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தவறாக நாட்டை நிர்வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ போராட்டத்தின் விளைவாக பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது, துரதிர்ஷ்டவசமாக ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரு அரசாங்கம் உள்ளதா?, அந்த அரசாங்கம் என்ன? யார் எவருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்? பொருளாதாரம் தொடர்பிலான அவர்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகள் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், பொதுத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் எனவும் இதன்மூலம் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை பின்பற்றி வருகின்றார் என தாம் கருதுவதாக இரா.சம்பந்தன் ஃப்ரொன்ட் லைன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் நம்பகத்தன்மை கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது மஹிந்த ராஜபக்ஸ திருகோணமலையில் தலைமறைவாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
தற்போதைய நிலை தொடர்ந்தால் நாடு மேலும் மோசமான நிலையை அடையும் என தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் முழு நாடும் எதிர்க்கும் ஒரு தரப்பினர் எவ்வாறு ஆட்சியை தொடர முடியும் என வினவியுள்ளார்.
Post a Comment