நாட்டிலிருந்தே சென்றுவிட சிந்தித்த நான், இப்போது இனவாதிகளுக்கு மிகப்பெரும் பதிலடி கொடுக்க காத்திருக்கிறேன்
- எம்.எப்.எம்.பஸீர் -
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை -பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியானது. பரீட்சை பெறுபேறுகள் வெளியானது முதல் சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் அது தொடர்பில் பல செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வாறான செய்திகளில் மிக்க கவனத்தை ஈர்த்ததும், உணர்வுபூர்வமான பல உண்மைகளை போட்டுடைக்கும் வண்ணமும் அமைந்த விடயம், வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மகள் பாத்திமா ஸைனப் பெற்ற 9 ‘ஏ ‘ சித்திகள் குறித்த செய்திகளாகும்.
இஸ்லாம், சிங்கள மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், கணிதம், வரலாறு, விஞ்ஞானம் ஆங்கில இலக்கியம், இரண்டாம் மொழி தமிழ், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுக்கு தோற்றி பாத்திமா ஸைனப் இவ்வாறு 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை கடந்த 2022 மே மாதம் நடந்தது. பாடசாலைகள் ஊடாக இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 4 இலட்சத்து 7129 ஆகும். ஒரு இலட்சத்து 10 367 பேர் தனிப்பட்ட ரீதியில் பரீட்சைக்கு தோற்றினர். ஆக ஒட்டுமொத்தமாக 5 இலட்சத்து 17 496 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றினர்.
இவர்களில் 231 982 பேர் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அதில் 10 863 பேர் 9 பாடங்களிலும் பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றுள்ளனர். இது தான் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள்.
அப்படி இருக்கையில், 9 ஏ சித்திகளைப் பெற்ற 10 863 பேர் இருக்கையில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மகள் பாத்திமா ஸைனப் தொடர்பில் மட்டும் இங்கு விஷேடமாக எழுத பல நூறு காரணங்கள் உள்ளன.
பாத்திமா ஸைனபின் 9 ஏ சித்திகள் சாதாரணமானதல்ல. இனவாதம், மதவாதம், அரசியல் காழ்ப்புணர்ச்சி, வதந்திகள், போலிகள், ஏமாற்றங்கள், அதர்மம் என ஏராளமான சவால்களை வெற்றிகொண்டது அது. எனவே தான் ஸைனபின் 9 ஏ பெறுபேறு விஷேடமானது.
பாத்திமா ஸைனப் குருணாகல் – திருக் குடும்ப கன்னியர் மடம் பாடசாலையில் தனது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்தவர். பின்னர் குருணாகல் மாவட்டத்திலேயே மிகப் பிரபலமான மலியதேவ மகளிர் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகும் போதும் அவர் அப்பாடசாலையிலேயே தரம் 9 இல் கல்வி பயின்றுகொண்டிருந்தார். அப்போதுதான் அவரது வாழ்வில் என்றும் கண்டிராத பல சவால்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.
ஸைனபின் தந்தை வைத்தியர் ஷாபி மீது இனவாத சக்திகள் முன்வைத்த போலியான குற்றச்சாட்டுக்கள், அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டமை பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் குறித்து நாம் அறிவோம். எனினும் டாக்டர் ஷாபியின் குடும்பத்தினர் குறிப்பாக அவரது பிள்ளைகள் கூட இந்த இனவாதத்தினால் எவ்வாறு குறிவைக்கப்பட்டார்கள் என்பது பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஸைனபை குறிவைத்த இனவாதம்
இந் நிலையில், தனது தந்தையின் கைதின் பின்னர் கூட பாத்திமா ஸைனப், குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியிலேயே கற்றுக்கொண்டிருந்தார். இதன்போது தந்தை ஷாபி சிஹாப்தீன் மீது முன் வைத்த அபாண்டத்தை விஞ்சிய குற்றச்சாட்டை, ஸைனப் மீது எந்த அடிப்படையுமின்றி சிலர் பரப்பினர்.
ஒரு சிறுமி (ஸைனப்) தனது சக தோழிக்கு உதவிக்காக வழங்கிய, செனிடரி நப்கின் ஒன்றினை மையப்படுத்தி மிக மோசமாக, கீழ்த்தரமாக அடிப்படையின்றி சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. கருத்தடையை உண்டாக்க வல்ல செனிடரி நப்கின்கள் பகிரப்பட்டதாக அச் செய்திகள் ஊடாக கூறப்பட்டன. இது ஸைனபின் கற்றல் நடவடிக்கைகளை வெகுவாக பாதித்தது. அவரது வாழ்வின் மிகப் பெரும் சவாலாக அது மாறியது.
இது குறித்து பாத்திமா ஸைனபிடம் இப்போது கேட்கும் போது அவர் கூறும் பதில் அழகானது. மிக ஆழமானது.
” ஆம்… நான் 9 ஆம் தரத்தில் கற்கும் போது, பாடசாலை மாணவிகளிடையே ‘ செனிடரி நப்கின்களை ‘ பகிர்ந்ததாக கதை ஒன்று பரப்பட்டது. பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. அது தொடர்பில் நான் வெட்கமடைகின்றேன். அதனை எழுதியவர்கள் தொடர்பில் நான் பரிதாபப்படுகின்றேன். அந்தளவு தூரம் கீழ்த் தரமாக ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியுமா?
எனக்கு எந்த கோபங்களும் இல்லை. அந்த குற்றச்சாட்டுக்களால் நான் அன்று மிக வேதனை அடைந்தேன். இன்றும் அது தொடர்பில் ஏதோ ஒரு ஏமாற்றத்தை உணர்கின்றேன். இவ்வளவு கீழ்த்தரமாக குற்றச்சாட்டு முன் வைத்தாலும் எனக்கு யாருடனும் கோபம் இல்லை. அன்று சமூக மயப்படுத்தப்பட்டிருந்த விஷம் காரணமாகவே மக்களின் மனங்கள் இவ்வாறு கீழ்த்தரமான விடயங்களை உள்வாங்கின. அதனாலேயே இனவாதம் எனும் ஆயுதம் கொண்டு, என்னை, எனது தந்தையை, எனது குடும்பத்தினரை தாக்குவதற்கான தேவை ஏற்பட்டது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்த முன்னர், அவ்வாறானதொரு நிலைமைக்கு தான் ஆளாக்கப்பட்டால் எனது மன நிலை எப்படி இருக்கும் என ஒவ்வொருவரும் சிந்தித்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது. ‘ என பாத்திமா ஸைனப் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
இடப் பெயர்வுகள்
வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் குடும்பத்தை இலக்கு வைத்த இனவாத சம்பவங்களின் பின்னர் குருணாகலையில் அவர்கள் வாழ்வது சவாலாக மாறியது. இதனால் வைத்தியர் ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பம் கொழும்பு நோக்கி இடம் பெயர்ந்தது.
இதனால் ஏற்கனவே மலியதேவ கல்லூரியிலும் விதைக்கப்பட்டிருந்த விஷத்தால், ஸைனப் பாடசாலையையும் மாற்ற வேண்டி ஏற்பட்டது. அதனால் குடும்பத்துடன் கொழும்புக்கு இடம் பெயர்ந்த ஸைனப், கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சேர்ந்து கற்றலை தொடர்ந்தார்.
அப்பாடசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதை கூட, விதிமுறைகளை மீறி பாடசாலை அவரை சேர்த்துக்கொண்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு ஸைனபின் கற்றல் நடவடிக்கைகளுக்கு அங்கும் இடையூறு ஏற்படுத்தின. எனினும் குறித்த பாடசாலை வழங்கிய ஆதரவுடன் அவர் அங்கு கல்வியை தொடர்ந்தார்.
இந் நிலையில், கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலை அண்மித்து, கொழும்பில் வாழ்வது வைத்தியர் ஷாபியின் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் எனும் தகவலொன்று பரிமாற்றப்பட்டிருந்தது.
இதனால், வைத்தியர் ஷாபி குடும்பத்தாருடன் 2019 நவம்பர் மாதம் கல்முனை நோக்கி இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. இதனால் பாத்திமா ஸைனபும் கல்முனை நோக்கிச் சென்றதுடன், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.
இது ஸைனபுக்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. இதுவரை சிங்கள மொழி மூலம் கற்ற ஸைனப், தமிழ் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் தமிழ் மொழி மூலம் சாதாரண தர பரீட்சைக்கான தயார்படுத்தல்களை செய்ய வேண்டியிருந்தது. இது ஸைனபுக்கு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும் சுமார் ஒன்றரை வருடங்கள் தமிழ் மொழியில் மனம் தளராது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்த ஸைனப், தனது தாயாரான வைத்தியர் இமாராவின் இடமாற்றத்துடன் கல்முனையிலிருந்தும் மாறவேண்டி ஏற்பட்டது.
இதனால் வைத்தியர் ஷாபி –இமாரா குடும்பத்தினர் கண்டி நோக்கி இடம்பெயர்ந்ததுடன், பாத்திமா ஸைனப் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் சேர்ந்து கற்றலை மீளவும் சிங்கள மொழியில் தொடர்ந்தார்.
இவ்வாறு சாதாரண தர பரீட்சை எழுதும் வரை தான் எதிர்கொண்ட அழுத்தம் மற்றும் அதனை எதிர்கொண்ட மன நிலை தொடர்பில் ஸைனப் இவ்வாறு தெரிவித்தார்.
‘‘இது நான் ஒரு போதும் நினைக்காத ஒன்று. ஏற்பட்ட அழுத்தங்களால் நான் கல்விகற்ற பாடசாலைகள் எனக்கு நிரந்தரமில்லாமல் போனது. அன்றாடம் எனது நடவடிக்கைகளை சாதாரணமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் எனக்கு கிடைக்கவில்லை. மிகப் பெரும் அழுத்தம் அது. தந்தை வீட்டில் இல்லை. தந்தையை விடுதலை செய்ய தாய் பட்ட கஷ்டங்கள்…. தம்பி, தங்கை என எனது குடும்பம் துண்டு துண்டாக சிதைக்கப்பட்டது. இவ்வாறு நடக்கும் போது சிறு பிள்ளை என்ற ரீதியில் நான் மனதளவில் மிகப் பெருமளவு பாதிக்கப்பட்டேன். எனது தாய், தந்தையை காப்பாற்ற போராடவேண்டி இருந்தது. அதே நேரம் எங்களை கவனிக்க, எங்களின் பொறுப்புக்களை நிறைவேற்ற அவர் ஒருபோதும் மறக்கவில்லை. அதனால்தான் நான் மனதளவில் உறுதியாக இருந்து வெற்றியடைந்தேன். ‘ என உணர்வு பூர்வமாக பதிலளித்தார்.
மலியதேவ கல்லூரி, ஆசிரியர்கள் தொடர்பில் ஸைனப் கூறுவதென்ன ?
‘‘எனக்கு கசப்பான அனுபவம் உள்ளது. எனினும் நான் குருணாகல் மலியதேவ கல்லூரி மீது குற்றம் சுமத்துவதை விரும்பவில்லை. எனது திறமைகளை வெளிப்படுத்த மலியதேவ எனக்கு வாய்ப்பளித்த ஒரு நல்ல இடம். உண்மையில், நான் பாடசாலையை குற்றம் சாட்டவோ எதிர்க்கவோ விரும்பவில்லை. நான் மிகவும் மதிக்கும் ஒரு பாடசாலையே மலியதேவ. நான் கற்ற ஏனைய பாடசாலைகளுக்கும் எனது கெளரவம் அதே அளவு உள்ளது. மலியதேவவில் அப்போது இருந்த மாணவர்களுக்கு வெளியிலிருந்து விதைக்கப்பட்டிருந்த விஷம், எனது மனது துன்புறும் வகையில் சம்பவங்களை எதிர்கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தியது.
எனக்கு கற்பித்த அனைத்து ஆசிரியர்களையும் நான் எப்போதும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். மலியதேவ கல்லூரியில் இருந்து நான் சென்றாலும் அங்குள்ள பல ஆசிரியர்கள், மேலதிக வகுப்பாசிரியர்கள் என்னை அவர்களது சூம் தொழில் நுட்பம் ஊடான வகுப்புக்களில் சேர்த்து எனது சவாலை வெற்றிகொள்ள எனக்கு உதவினர்.’ என பாத்திமா ஸைனப் கூறிப்பிடுகின்றார்.
தொடர்ந்து விடிவெள்ளியிடம் சமூகத்தை நோக்கி கருத்துக்களை பரிமாற்றிக்கொண்ட ஸைனப், ‘‘குழந்தைகளின் உலகம் மிக அழகானது. மாசுபடாதது. பெரியவர்கள் தான் அதனை மாசுபடுத்துகின்றனர். முதலில், நாட்டில் உயர் இடங்கள் சரியாக அமைய வேண்டும். ,மக்கள் தங்கள் அதிகாரத்திற்காகவும் பதவிக்காகவும் இனவாதம் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகின்றனர். இது தான் இலங்கையின் மிகப் பெரும் பிரச்சினை.
சமூகத்துக்கு சொல்ல வேண்டிய செய்தி யாதெனில், எமக்கு சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர், பறங்கியர் என நான்கைந்து பிரிவினராக பிரிந்து முன்னோக்கி செல்ல முடியாது. மதங்கள் அனைத்தும் மனிதர்களையும் நல்வழிப்படுத்தவே அன்றி அதனை ஆயுதமாக பயன்படுத்தி சண்டை பிடிப்பதற்கானதல்ல.
பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என அனைத்து மதங்களும் நல்ல மனிதர்களாக வாழவே கற்றுக்கொடுக்கின்றன. நாம் மனித நேயம் எனும் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். எனது தந்தை சிறு பராயத்திலிருந்து எனக்கு சொல்லித் தந்ததுதான் அது.
‘‘மகளே… படித்து, பணம் செல்வம் சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.. ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும். மனித நேயத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள். ஏழை எளியவர்களுக்கு அன்பு காட்டுங்கள். புன்முறுவலுடன் மக்களை எதிர்கொள்ளுங்கள். வாழ்வில் ஒரு போதும் பெருமை கொள்ளாதீர்கள்.இன்று எம்மிடம் ஒரு விடயம் இருக்கும்.. நாளை அது இல்லாமல் போய்விடும்…’’ இது தான் சிறுவயது முதல் எனது தந்தை எனக்கு கற்றுக்கொடுத்து மனதில் விதைத்தவை’’ என ஸைனப் கூறுகின்றார்.
எமது வாழ்க்கை ரோஜா பூக்களால் நிரப்பப்பட்ட படுக்கைகள் அல்ல என கூறும் ஸைனப் ‘‘வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது . சவால்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகின்றன. ஒரு நதி மேடு பள்ளங்களை கடந்து பாய வேண்டும்.. அப்போதுதான் ஓடும் நதியின் அழகு தெரியும்.. நாம் வீழ்ந்தாலும், அழுதாலும் மனதை தளரவிடாது மீண்டெழ வேண்டும். நான் இந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள, ஒரு வார்த்தையாலேனும் எனக்காக, எனது குடும்பத்தினருக்காக உதவிய அத்தனை பேரையும் நன்றியோடு நினைவு கூருகின்றேன். அவர்களுடன் இந்த பெறுபேற்றை நான் பகிர்ந்து கொள்கின்றேன்.’ என்கின்றார்.
ஒரு கட்டத்தில் நாட்டிலிருந்தே சென்றுவிட வேண்டும் எனத் தோன்றினாலும், தற்போது அவ்வாறானதொரு எண்ணம் இல்லை எனக் கூறும் ஸைனப், உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்கவிருப்பதாகவும், எதிர்காலத்தில் என்ன தொழில் செய்தாலும் இந் நாட்டின் மக்களுடன் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் தெரிவிக்கின்றார். அதுவே இனவாதிகளுக்கு கொடுக்கும் மிகப் பெரும் பதிலடி எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந் நிலையில், பாத்திமா ஸைனபின் பெறுபேறு தொடர்பில் அவரது தந்தை வைத்தியர் சாபி சிஹாப்தீனிடமும் விடிவெள்ளி வினவியது. அதற்கு பதிலளித்த வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், ‘இதனை மகளின் வெற்றியாக மட்டும் நான் கருதவில்லை. நாம் கஷ்டத்தில், துன்பத்தில் வீழ்ந்த போது எமக்காக துஆ செய்த, எமக்காக பேசிய, எமக்காக முன்னிலையான முழு சமூகத்துக்கும் கிடைத்த வெற்றி இது. இனவாதத்துக்கு எதிரான வெற்றி இது. மனித நேயத்தின் வெற்றி இது. அனைவருக்கும் நான் நன்றி கூறுகின்றேன். சமூகம் எமக்காக செய்தவைகளுக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். சமூகத்துக்கான எனது, எமது கடமைகளையும் நாம் எந் நேரமும் நிறைவேற்றுவோம். அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்’ என உணர்வுபூர்வமாக குறிப்பிட்டார்.
எவ்வாறான சவால்கள் வருகின்ற போதிலும் அவற்றை எதிர்கொண்டு வாழ்வில் எதிர்நீச்சலடித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற பாடத்தை நமக்கு நிதர்சனமாகக் கற்பித்திருக்கிறார் ஸைனப். அவரின் எதிர்கால வெற்றிகரமான கல்வி வாழ்க்கைக்காக நாமும் பிரார்த்திப்போம். வாழ்த்துவோம்! – Vidivelli
Post a Comment