விருந்தாளி போல வருடாவருடம் அக்குறணைக்கு தவறாமல் வரும் வெள்ளநீர்
- எஸ்.என்.எம்.சுஹைல் -
விருந்தாளிபோல் வருடா வருடம் ஆண்டிறுதியில் அக்குறணை நகருக்கு தவறாமல் வந்து செல்கிறது வெள்ளநீர். 1999 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் அனர்த்தம் இடம்பெறுகின்றமைக்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
“அக்குறணை நகரம் 28 தடவைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது” என அண்மையில் சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் சுட்டிக்காட்டியிருந்தார். ஆக, தற்போது 29 ஆவது தடவையாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி அக்குறணை பிரதேசத்தில் 156 மில்லி மீற்றர் மழை பதிவானதாக அக்குறணை பிரதேச சபை காலநிலை அவதானிப்பு நிலையம் கூறுகிறது. இந்நிலையில் தொடராக காலை 7.30 மணி வரை பெய்த அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அம்பத்தென்ன முதல் அக்குறணை 7 ஆம் மைல் கல் அஸ்ஹர் பாடசாலை சந்தி வரை கிட்டத்தட்ட 5 கிலோமீற்றர் தூரம் வரை நீரில் மூழ்கியது. குறிப்பாக அக்குறணை நகரின் துனுவில சந்தியில் 8 அடி வரை வெள்ளம் புகுந்தது.
பிரதானமாக மனித செயற்பாடுகளின் விளைவுகளினாலே பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டிய துரதிஷ்டம் நீடிக்கிறது. அதற்கப்பால், திட்டமிடப்படாத நகர அபிவிருத்தி திட்டங்கள், சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் சென்று தீர்வுக்காக ஓரணியில் சேர்ந்து செயற்பட முடியாத பிற்போக்குத் தனத்தையும் குறிப்பிட முடியும்.
அக்குறணை நகரில் வியாபாரிகள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான இழப்புகளை சந்திப்பதாக அக்குறணை வர்த்தக சம்மேளன தலைவர் ஏ.எஸ்.ரியாஸ் முஹம்மது குறிப்பிட்டார்.
“இம்முறை, ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக கணக்கிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுவரை அளவிட்டதன் படி கிட்டத்தட்ட 150 கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தொகை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே இருக்கின்றது” என்றும் வரத்தக சம்மேளன தலைவர் கூறுகின்றார்.
“அக்குறணை நகரில் வர்த்தக கட்டடங்களே வெள்ளப் பெருக்கிற்கு பிரதான காரணமல்ல, ஏற்கனவே, பிங்கா ஓயா ஆற்றின் ஆழம் 20 தொடக்கம் 25 அடி வரை இருந்தது. இன்று அது 7 அடி வரை தான் இருக்கிறது. அத்தோடு, பொல்கொல்ல அணைக்கட்டின் வான் கதவுகள் திறக்கப்படாமையினால் நீண்ட நேரம் வெள்ள நீர் வடிந்தோடவில்லை. எனவே, கட்டடங்களை அகற்ற வேண்டும் என்பதை மட்டும் கூறுவதை நாம் ஏற்கமாட்டோம். அத்தோடு, ஏற்கனவே, அடையாளம் காணப்பட்ட 5 பாலங்களை அகற்றிய பின் வௌ;ளப் பெருக்கு குறைவடையுமாக இருந்தால் வர்த்தக கட்டடங்களை அகற்றுவதற்கு நாம் இணக்கம் தெரிவிப்போம். அத்தோடு, இந்த கட்டடங்களை அகற்றுவதன் ஊடாக வெள்ளப்பெருக்கு முற்றாக நீங்கும் என்ற உத்தரவாதத்தை அதிகாரிகளினால் தர முடியாதிருக்கிறது. அவ்வாறு உத்தரவாதமளிக்கும் பட்சத்தில் கட்டடங்களை அகற்றுவதற்கு நாம் தடையாக இருக்கப்போவதில்லை. பிரச்சினையை அவர்கள் சரியாக இனங்காணாது கட்டடங்களை அகற்றுவதில் குறியாக இருப்பதை நாம் கண்டிக்கிறோம்” என்றார் வரத்தக சம்மேளன தலைவர்.
இதனிடையே, சம்பிக்க ரணவக்க நகர அபிவிருத்தி அமைச்சராக இருக்கும்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அக்குறணையில் 124 சட்டவிரோத பாலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அந்த பாலங்களை அகற்றும்படி பணிக்கப்பட்டது. அத்தோடு, ஆற்றின் இருபக்கத்தையும் பெருப்பிக்கும்படி யோசனை முன்வைக்கப்பட்டது. நீரப்பாசன திணைக்களம், மகாவலி அபிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஒன்றிணைந்து இதனை அமுல்படுத்த முயற்சிக்கும்போது அங்கிருந்து எமக்கு அழுத்தங்கள் வந்தது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் பண்டார தெரிவித்தார்.
அக்குறணை பிரதேச சபை வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது. எனினும் அக்குறணையில் வெள்ளம் ஏற்படுவது இன்று நேற்று ஏற்பட்ட பிரச்சினையல்ல, இது முப்பது வருடங்களாக தொடரும் அவலம் என்கிறார் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன்.
“அக்குறணை வெள்ளத்தை தடுப்பதற்காக நல்லாட்சியின்போது, அமைச்சரவை செயலணியொன்றை நியமித்தது. இதன்படி, சில யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாகவே இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். பிரதேச சபைக்கு ஒரேயொரு தொழிநுட்ப அதிகாரியே இருக்கின்றார். எனினும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப பிரிவின் ஊடாகவே வௌ;ளத் தடுப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அக்குறணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அநாவசிய கட்டடங்களை அகற்றுவதன் ஊடாக இதற்கு தீர்வை பெற முடியும். அத்தோடு, அக்குறணை நகருக்குள் செல்லும் ஆறு நீர்ப்பாசன திணைக்களத்துக்குள் உள்வாங்கப்படாமையால் ஆற்றுக்கு இரு பாகங்களிலும் உள்ள இடங்கள் அரசாங்கத்திடம் இல்லை. அவை தனியாரிடம் இருப்பதனால் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. எம்மால் மக்கள் காணிகளில் இருக்கும் கட்டடங்களை அகற்ற முடியாது. ஏற்கனவே இவை நீதி மன்றம் வரை சென்றும் பிரதேச சபைக்கு பாதகமான தீர்ப்புகளே கிடைத்திருக்கிறது”.
இதனிடையே, “1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை பிரதேச சபையின் தவிசாளராக சுலைமான் இருந்த குறித்த காலப்பகுதியிலேயே வௌ;ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. அவர்களே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்” என்றும் இஸ்திஹார் சாடினார்.
எனினும் 1999 முதல் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போதிருந்த அக்குறணை பிரதேச தவிசாளர் மர்ஹூம் சுலைமானை குற்றம் சுமத்துவதை கண்டிக்கிறேன் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.அப்துல் ஹலீம் கூறுகின்றார்.
“அக்குறணை பிரதேச சபையின் அதிகாரம் 2001 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் அதிகாரத்திலேயே இருந்துள்ளது. இதன்போது, ஹலீம்தீன், சிம்சான் ஆகியோர் தவிசாளராக இருந்துள்ளனர். அவர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களே. பின்னர் 2018 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்களிப்போடு சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த இஸ்திஹார் இமாதுதீன் தவிசாளராக பதவி வகிக்கின்றார். பொதுஜன பெரமுனவுடன் இணக்க அரசியலில் ஈடுபடுவோர் இந்த வேலைகளை இலகுவாக செய்து காட்ட வேண்டும். வெறுமனே குற்றச்சாட்டுகள் சுமத்துவதால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்போவதில்லை” என்றும் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவிக்கிறார்.
மேலும், “நாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று சாடி வருகின்றனர். நாம் 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நானும் அப்போதைய அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இணைந்து அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தோம். இதன் விளைவாக, விசேட செயலணியொன்று உருவாக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உள்ளிட்ட அரசியல் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அக்குறணை ஹஸ்னா பள்ளிவாசல், ஜம்இய்யதுல் உலமாவினரும் கலந்துகொண்டு பாராளுமன்றத்திலும் கண்டியிலும் கூட்டங்கள் நடத்தி இதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம்.
இந்த செயலணியின் அறிக்கைப்படி, அக்குறணை நகரை ஊடறுத்துச் செல்லும் ஆற்றில் மண் அகழ்தல், ஸியா வைத்தியசாலைக்கு அருகே உள்ள பாலத்தை அகற்றி அப்பாலத்தை உயர்த்தி அமைத்தல், சட்டவிரோத கட்டடங்களை அகற்றுதல், இனங் காணப்பட்ட பாலங்களை தகர்த்தல், அக்குறணை தொடக்கம் கட்டுகஸ்தோட்டை வரையிலான ஆற்றில் சேற்றை அகழ வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதன் விளைவாக, யூ.எஸ்.எயிட் இனால் மணல் அகழும் இயந்திரமொன்று கிடைக்கப் பெற்றது. இந்நடவடிக்கைகள் விலைமனு கோரல் அடிப்படையில் இடம்பெற வேண்டும் என கூறப்பட்டது. எனினும் அந்நடவடிக்கையில் தற்போது ஊழல் இடம்பெறுவதை நான் அறிவேன்.
மக்கள் பிரச்சினையில் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருக்காது நாம் அரசாங்கத்தில் இருக்கின்றபோது அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு தீர்வை நோக்கி நகர்ந்ததைப் போன்று பேதங்களை மறந்து இன்றும் செயற்பட வேண்டும். அப்போதுதான், இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து மக்கள் சந்திக்கும் இடர்களை நீக்க முடியும். அத்தோடு, வியாபாரிகளுக்கு ஏற்படும் தொடர் இழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்றார்.
அக்குறணை நகருக்குள் பெருக்கெடுக்கும் வௌ;ளத்தை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தீர்வொன்றுக்கு வருவது அவசியமாகிறது. குறிப்பாக அரசியல் அதிகார மட்டத்தில் மணல் அகழ்தல், சேற்றுக் கழிவுகளை வெளியெடுத்தல், பாலம் நிர்மாணித்தல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். என்றாலும், தனியார் காணிகளில் உள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு பிரதேச வர்த்தகர்களும் பொது மக்களும் பெரும் ஒத்துழைப்பை வழங்குவதன் ஊடாகவே இதற்கு தீர்வை பெறமுடியும். கட்டடங்கள் அகற்றும்போது ஏற்படும் இழப்புகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். எனினும், இதனை அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
குறிப்பக, தொடராக ஏற்படும் நஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுடன், பிரதேச மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வைப் பெற வேண்டியுள்ளது. வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலத்தில் அக்குறணை நகரம் முற்றாக ஸ்தம்பிதமடைந்து பிரதேசத்தின் இயல்பு நிலை சீர்குலைகின்றது. மேலும், ஏ 9 வீதியின் போக்குவரத்தும் முற்றாக தடைப்படுவதனால் மறைமுகமாக பெருளாதார நஷ்டங்களும் ஏற்படுவதையும் நாம் கவனத்திற்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க ஒன்றுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.- Vidivelli
Post a Comment