Header Ads



மொராக்கோவின் சிங்கம் போன்ற ஆட்டம் – தோற்றாலும் வரலாறு படைத்த வீரர்கள்

-BBC-

பிரான்ஸ் அணி, மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழையவிருக்கிறது. இறுதிச்சுற்றில் பிரான்ஸ், அர்ஜென்டினாவுடன் மோதவுள்ளது.


மொராக்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டின் கால்பந்து அணிக்கு அட்லஸ் லயன்ஸ் என்று பெயர். அவர்களுடைய பெயருக்கு ஏற்றாற்போலவே, பிரான்ஸ் உடனான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் செயல்பட்டார்கள்.


இந்த ஆண்டின் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே, தனக்கு எதிராக ஆடிய எந்த அணிக்கும் ஒரு கோலை கூட விட்டுக்கொடுக்காமல் ஆடிய மொராக்கோ அணியின் எல்லைக்குள் புகுந்த தியோ ஹெர்னாண்டெஸ், அரையிறுதி ஆட்டம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே பிரான்ஸ் அணிக்காக ஒரு கோலை அடித்தார்.


யசின் பூனோவின் தற்காப்பைக் கடந்து அதைச் சாத்தியமாக்கியதன் மூலம் கத்தாரில் மொராக்கோவுக்கு எதிராக முதல் கோலை அடித்த பெருமையை அவர் பெற்றார்.


ஆறு மொராக்கோ  வீரர்கள் எம்பாப்பே அடிக்க முயன்ற கோலை தடுத்து கோல் பாக்ஸ் எல்லைக்குள் இருந்து வெளியே தள்ளினார்கள். ஆனால், அந்த நேரம் பார்த்து அந்த இடத்திற்கு அருகில் வந்த தியோ ஹெர்னாண்டெஸ் சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தினார்.


கோல் கீப்பர் யசின் பூனோ, தற்காப்பு ஆட்டக்காரர்களான அஷ்ரஃப் தாரி, ரொமைன் சைஸ் ஆகியோர் அதைத் தடுக்க முயன்றபோதும், அவர்களுக்கு நடுவில் புகுந்து சென்ற பந்து மொராக்கோவுக்கு முதல் இடியாக இறங்கியது.


ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில், ஒரு கோல் முயற்சியைத் தடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத தருணத்தில் விழுந்த அந்த கோல், பிரான்ஸ் ரசிகர்களுக்கு அபாரமான நம்பிக்கையையும் மொராக்கோ ரசிகர்களின் முகத்தில் என்ன நடந்தது என்ற அதிர்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியது.


ஆரம்பத்திலேயே நிகழ்ந்த அந்தப் பின்னடைவை நிவர்த்தி செய்ய, கடுமையான எதிராட்டத்தை மொராக்கோ நிகழ்த்தியது. வழக்கமாக குறைந்த நேரமே பந்தை தங்கள் ஆளுமையில் வைத்திருக்கும் அவர்கள், இந்தப் போட்டியில் அதிக நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆட்டத்தை ஆடினர்.


மொராக்கோவுக்கு எதிரான முதல் கோலை அடித்த பெருமையைப் பெற்றார், பிரெஞ்சு வீரர் தியோ ஹெர்னாண்டெஸ்


முதல் பாதி முடிந்தபோது, இரு அணிகளுக்குமே அழுத்தம் அதிகமாக இருந்தது. மொராக்கோவுக்கு எதிராக ஒரு கோலை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியாது என்ற அழுத்தத்தில் பிரான்ஸ். ஒரு கோல்கூட எடுக்காமல் இருந்ததால், எப்படியாவது ஒரு கோல் அடித்து சமன் செய்து, வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் மொராக்கோ.


பிரான்ஸ் இரண்டாவது சிறந்த அணியாக இருந்தபோதிலும், ராண்டால் கோலோ முவானி, 79வது நிமிடத்தில் களமிறங்கி கோல் அடிக்கும் வரை அவர்களால் மொராக்கோவுக்கு எதிராக இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை.


அந்த கோலின் மூலம், 1962ஆம் ஆண்டில் பிரேசில் செய்த சாதனைக்குப் பிறகு, உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாகத் தக்க வைக்கும் வாய்ப்பு பிரான்சுக்கு கிடைத்துள்ளது.


உலகக்கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்ற மொராக்கோ, சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு குரோஷியாவுடன் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்காக மோதுகிறது.


முதல் கோலுக்காக, ஹெர்னாண்டெஸ் தனது இடது பாதத்தை உயரமாக உயர்த்தி, மொராக்கோ வீரர்கள் தட்டிவிட்டுப் பறந்து வந்த பந்தை உதைத்தார். அன்டோய்ன் கிரேஸ்மேன் தொடங்கி வைத்து, அவரிடமிருந்து பந்தைப் பெற்று கிலியன் எம்பாப்பே அடிக்க முயன்ற கோலை, அவர் அந்த நகர்வின் மூலம் முடித்து வைத்தார்.


அந்த நிமிடம், உலகக்கோப்பையில் அவர்களுக்கு எதிராக விழுந்த அந்த கோல், மொராக்கோ அணியை வலுவிழக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து கேப்டன் ரொமைன் சைஸ் 20வது நிமிடத்தில் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அதோடு, கடைசி நிமிடத்தில் நயீஃப் அகேர்டை அஷ்ரஃப் தாரிக்கு பதிலாகக் களமிறக்கியது, முந்தைய போட்டியில் இருந்த டிஃபண்டர் வரிசையைக் கொஞ்சம் குலைத்தது.


அகேர்டுக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருடைய செயல்பாடு குறித்து கவலைகள் இருந்தன. அப்படியிருந்தும் அவர் அணியின் முதல் வரிசையில் கொண்டுவரப்பட்டார்.


இந்த இடையூறுகளை பிரான்ஸ் ஸ்டிரைக்கர் ஒலிவியே கிரூட் நன்கு பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து மொராக்கோவின் கோல் போஸ்டை  தாக்கினார். மிட்ஃபீல்டர் ஊஹெலியான் சூவெய்மென்னியிடம் பெற்ற பந்தை தெளிவான கோல் ஷாட்டில் அடிக்க முயன்றார். ஆனால், அது தவறியது.


இப்படியாக, பிரெஞ்சு அணி எதிரணியிடம் இருந்த சின்னச்சின்ன சறுக்கல்களைக்கூட விடாமல் நன்கு பயன்படுத்தியது.


இருப்பினும், இதற்கெல்லாம் அஞ்சாமல் மொராக்கோ எதிர்த்தாக்குதல் ஆட்டத்தையும் கடுமையான தற்காப்பு ஆட்டத்தையும் ஆடியது. அஸெடின் ஒனாஹியின் இரண்டு அருமையான கோல் ஷாட்கள், பிரெஞ்சு கேப்டன் ஹுயூகோ லோரிஸின் முயற்சியால் தடுக்கப்பட்டது. அவருடைய தடுப்பு ஊகத்தினால் நடந்திருந்தாலும், அது பிரெஞ்சு அணிக்கு அதிர்ஷ்டமாகவும் மொராக்கோவுக்கு துரதிர்ஷ்டமாகவும் அமைந்துவிட்டது.


பிரெஞ்சு வெற்றி பெற்றிருந்தாலும், போட்டி முழுவதுமே மொராக்கோவின் ஆட்டம் அவர்களை அச்சுறுத்தியது. நடப்பு சாம்பியன், மிகவும் விரும்பப்படும் அணி. ஆனால், அதை அசைத்துப் பார்த்துவிட்டது, அட்லஸ் லயன்ஸ் சிங்கங்களின் வேகம். இபாஹிமா கொனாடே, ரஃபேல் வரானே ஆகியோர், என்-நெசிரி, பூஃபால் ஆகியோர் பற்ற வைத்த நெருப்பை அணைக்க முயன்றன.


நேரம் போகப் போக, பிரெஞ்சு அணி மொராக்கோவின் தாக்குதலைத் தடுப்பதற்கு அவர்களுடைய கணிப்புகளையும் முடிவுகளையும் விட அதிர்ஷ்டத்தைப் பெரிதும் நம்பும் அளவுக்கு, எதிரணியின் ஆட்டம் எதிர்பார்க்க முடியாத வகையில் இருந்தது. ஆம், அந்த சிங்கங்களின் கர்ஜணை அவர்களை அந்த அளவுக்கு அச்சுறுத்தியது.


மொராக்கோ தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், உலக கால்பந்து ரசிகர்களிடையே ஒரு நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது. கால்பந்து உலகில் மரியாதையைப் பெற ஒரு அணிக்கு இருப்பது வெறும் 90 நிமிடங்களே. அந்தத் தொன்னூறு நிமிடங்களில் இருக்கும் மரியாதை போகலாம் அல்லது வானளாவிய மரியாதை கிடைக்கலாம்.


அப்படிப்பட்ட அந்த 90 நிமிடங்களுக்குள் தோற்றிருந்தாலும், வரலாற்றுக் கவனம் பெற்றுள்ளது மொராக்கோ. தாங்கள் வரலாறு படைத்துள்ளதாக மொராக்கோ ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சாதாரண வரலாறல்ல. கால்பந்து ஜாம்பவான் அணிகளில் ஒன்றான பிரான்ஸை மிரள வைத்து, வரலாறு படைத்திருக்கிறார்கள்.


தங்கள் அணியினர் நாடு திரும்பும்போது, அவர்களைக் கைநீட்டி, அன்பைப் பொழிந்து வரவேற்க அவர்கள் காத்திருக்கின்றனர். கால்பந்து உலகில் தங்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கிவிட்டு வீடு திரும்பும் அவர்களைக் கொண்டாட மொராக்கோ மக்கள் காத்திருக்கின்றனர்.


மொராக்கோ ரசிகர்களை நோக்கியவாறு தரையில் தலை தாழ்த்தி மரியாதை செலுத்தும் மொராக்கோ அணியினர்


ஸ்பெயின், போர்ச்சுகல் என்று தோற்கடிக்க முடிந்த மொராக்கோ, பிரான்ஸ் போன்ற அணியைத் தோற்கடிக்க இன்னும் மேம்பட வேண்டும். ஆனால், அதற்காக அவர்களைச் சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது என்பதை நிரூபித்துள்ளார்கள்.


அணியின் மேனேஜர் வலித் ரெக்ரகீ, வீரர்களிடம் “மொராக்கோ அரசர் உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறார். மொராக்கோ மக்கள் பெருமைப்படுகிறார்கள். மொத்த உலகமும் இந்த அணியைப் பார்த்து பெருமைப்படுகிறது” எனக் கூறினார்.


அதைத் தொடர்ந்து, மொராக்கோ வீரர்கள் அனைவரும் இணைந்து கட்டிப்பிடித்துக் கொண்டனர். முன்னால் நகர்ந்து வந்து, ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். ரசிகர்களின் கொண்டாட்ட கோஷங்கள் மைதானம் முழுக்க எதிரொலித்தன.

No comments

Powered by Blogger.