Header Ads



கறவை மாடுகளை சென்று பார்வையிட்ட ஜனாதிபதியும், அதுகுறித்த விபரங்களும்...!


அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின் உணவுத் தேவையை வழங்கும் கட்டமைப்புடன் இணைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

அம்பேவெல பண்ணைக்குச் சொந்தமான ‘யுனைடட் டெய்ரீஸ் லங்கா லிமிடட் அம்பேவெல’ புதிய பிரிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (27) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கினார்.


அம்பேவெல பண்ணையின் பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள முறையான வளர்ச்சியைப் பாராட்டிய ஜனாதிபதி, இது ஏனைய பண்ணைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அனுபவத்திற்காக இப்பண்ணையை திறந்து வைப்பதுடன் அதற்குத் தேவையான பின்புலத்தை தயார்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.


அம்பேவெல பண்ணை, இலங்கை மற்றும் தெற்காசியாவின் பால் உற்பத்தி மற்றும் பண்ணை தொடர்பான அதியுயர் தொழில்நுட்ப பயன்பாட்டின் பிரதான மத்திய நிலையமாகச் செயற்பட்டு வருவதாக அம்பேவெல பண்ணைக் குழுமத்தின் பொது முகாமையாளர் சரத் பண்டார குறிப்பிட்டார்.


‘யுனைடட் டெய்ரீஸ் லங்கா லிமிடட் அம்பேவெல’ புதிய பிரிவில் தற்போது சுமார் 1000 கறவை மாடுகள் உள்ளதோடு, அவற்றிலிருந்து தினமும் பால் சேகரிக்கப்படுகிறது. இந்த மாடுகளிடமிருந்து தினமும் 03 முறை பால் கறக்கப்படுவதோடு நாட்டின் பால் தேவையின் 40,000 லிற்றர் திரவப் பால் இப்பண்ணை உள்ளிட்ட ஒட்டுமொத்த அம்பேவெல கட்டமைப்பிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது.


இக்கறவை மாடுகளைப் பராமரித்தல், தேவையான உணவு மற்றும் பானங்கள் வழங்குதல், எடை நிறுத்தல் , நோய் நிலைகளைக் கண்டறிதல், நோய் நிலைமைக் காணப்பட்டால் மாடுகளைப் பிரித்தெடுத்தல் போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் இயந்திரம் மூலம் சுயமாக நடைபெற்று வருகின்றன.


அம்பேவெல பண்ணைக் கட்டமைப்பு முழுவதும் உள்ள  4500 மாடுகளுக்கு தற்போது உணவளிக்கப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டு அம்பேவெல குழுமம் நிறுவப்படுவதற்கு முன்னர், அது அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தபோது, நாளொன்றுக்கு 1500 லிற்றர் பால் மட்டுமே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது.


தற்போது சிறந்த கறவை மாடுகளை இலங்கையில் உருவாக்குவதில் அம்பேவெல கட்டமைப்பு கடந்த 15 ஆண்டுகளுக்குள் வெற்றிக் கண்டுள்ளது. அதன்படி, இந்தக் கறவை மாடுகள் எதுவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. மேலும் கறவை மாடுகளை இனப்பெருக்கம் செய்வதற்காக உலகில் தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கமைய உலகிலுள்ள உயர் ரக ஆண் மாடுகளின் விந்துக்களை இறக்குமதி செய்து, மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இலங்கைக்குப் பொருத்தமான கறவை மாடுகளை இனப்பெருக்கம் செய்வது இந்நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒரு பகுதியாக உள்ளது.


அதேபோன்று, கறவை மாடுகளுக்கு உணவளிப்பதன் மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சோள விவசாயிகளின் முழுமையான விளைச்சலை அம்பேவெல பண்ணைக்கு பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


அதன்படி, ஆண்டுக்கு சுமார் 25,000 மெட்ரிக் தொன் சோளப் பயிர்களை சேகரித்து, சேமித்து வைக்கும் வசதியும் அம்பேவல கட்டமைப்பில் உள்ளது.


அம்பேவெல பண்ணைக்கு அருகில் தற்போது கைவிடப்பட்ட நிலையிலுள்ள மேய்ச்சல் நிலத்துக்கு உகந்ததென இனங்காணப்பட்டுள்ள சுமார் 30 ஏக்கர் காணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பார்வையிட்டார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

28-12-2022

No comments

Powered by Blogger.