நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய, மின்வெட்டு காலத்தை குறைக்க சாத்தியம் இல்லை
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய, மின்வெட்டு காலத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் மின்வெட்டு தொடருமா என நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போதே அவர் இதனை கூறினார்.
அத்துடன், பெப்ரவரி மாதமளவில் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறுவது குறைவடையும் எனவும், இதன் காரணமாக நிலக்கரி மற்றும் எரிபொருளை பயன்படுத்தியே அதிக அளவிலான மின்னுற்பத்தியை மேற்கொள்ள வேண்டியேற்படும் எனவும் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அவ்வாறு நிலக்கரி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட்டால், மின்னுற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், போதுமான அளவு நிலக்கரி கொள்வனவு செய்யப்படாமையினால், மின்னுற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு குறித்த காலப்பகுதியில் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
இந்த நிலை தொடருமானால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் மின்வெட்டு பாரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்சார சபையின் இழப்புகளை ஈடு செய்யும் வகையில், மின் கட்டணத்தை அதிகரிக்க சட்டத்தில் இடமில்லை எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையில் 10% மின் பாவனை குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், மின்சார பாவனையை குறைத்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Post a Comment