தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்பட்டது (படங்கள்)
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
2021 ஆம் ஆண்டு முதல் இனவாதிகளால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த பல தசாப்த வரலாறு கொண்ட தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் – பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏகோபித்த தீர்மானத்தின் பின்பு கடந்த வாரம் அவ்விடத்திலிருந்தும் அகற்றிக் கொள்ளப்பட்டது
புதியவோர் இடத்தில் முஸ்லிம்கள் புதிதாக பள்ளிவாசலொன்றினை நிர்மாணித்துக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் காணியொன்று ஒதுக்கீடு செய்யப்பட்டதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகம் தம்புள்ளை முஸ்லிம்களின் ஒத்துழைப்புடன் தம்புள்ளையில் புதிய பள்ளிவாசலொன்றினை நிர்மாணித்துள்ளது.
முஸ்லிம் வர்த்தக சமூகம் செறிவாகவுள்ள தம்புள்ளை சந்தைக்கு அருகில் நகரஅபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 20 பர்ச்சஸ் காணியில் 2900 சதுர அடி பரப்பில் புதிய பள்ளிவாசல் நிறுவப்பட்டு கடந்த 23 ஆம் திகதி முதல் ஜும்ஆ பிரசங்கத்தை பள்ளிவாசலின் பேஷ் இமாம் ஜவுபர் மெளலவி நிகழ்த்தினார்.
தம்புள்ளை புனித பூமி பெளத்தர்களுக்குச் சொந்தமாகும், இப்புனித பூமி எல்லைக்குள் எந்தவொரு மாற்றுமத வணக்கஸ்தலங்களும் இருக்கக்கூடாது. இங்கு அமைந்தி ருப்பது பள்ளிவாசல் அல்ல.வெறும் தகரக் கொட்டில் அதை முஸ்லிம்கள் அகற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த காலங்களில் சவால் விட்ட ரங்கிரி ரஜமகாவிகாரையின் முன்னாள் அதிபதி இனாமலுவே சுமங்கலதேரர் பள்ளிவாசலின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தமை கவனிக்கத்தக்க அம்சமாகவிருந்தது.
ரங்கிரி ரஜமகாவிகாரையின் தற்போதைய அதிபதி அம்பகஸ்வெவ ராஹுல தேரர் சுகயீனம் காரணமாக திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
ஏற்கனவே இயங்கி வந்த ஹைரியா பள்ளிவாசல் அமைவிடத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு அப்பால் புதிய பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் என்னை இனவாதியாக,மதவாதியாகவே நோக்கினார்கள். நான் ஓர் இனவாதியோ, மதவாதியோ அல்ல. தற்போது முஸ்லிம்களுக்கு சட்டரீதியாக புதிய இடத்தில் பள்ளிவாசலொன்றினை நிர்மாணித்துக் கொள்வதற்கு வாய்ப்புக்கிடைத்துள்ளது. இது தொடர்பில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன் என இனாமலுவே சுமங்கல தேரர் பள்ளிவாசல் திறப்பு நிகழ்வின்போது குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 1978 ஆம் ஆண்டு தம்புள்ளை புனித பூமித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. என்றாலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல் அத்திட்டத்துக்கு இடையூறாக சட்ட விரோதமான இடத்தில் அமைந்திருந்ததால் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனாலே நாம் பள்ளிவாசலை அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்திவந்தோம். இன்று முஸ்லிம்களுக்கு புதிய காணி கிடைத்து புதிய பள்ளிவாசல் எழுந்து நிற்கிறது.
பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பில் எதிர்காலத்தில் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றைத் தீர்த்துத் தருவதில் நான் என்றும் உதவியாக இருப்பேன். இன்று பெருந்தொகையான முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு வருகை தந்திருக்கிறார்கள். முன்பு தகரக் கொட்டிலில் இவர்கள் எவ்வாறு தங்களது வணக்க வழிபாடுகளை நடாத்தினார்கள் என்று வியப்படைகிறேன் என்றார்.
இனாமலுவே சுமங்கள தேரர் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு பெருந்தொகைப் பணத்தையும் அன்பளிப்பாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம்.கியாஸ்
பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம்.கியாஸ் புதிய பள்ளிவாசல் நிர்மாணம் தொடர்பில் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையில்; தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்குக் கடந்த காலங்களில் தொடராக சவால்கள் விடுக்கப்பட்டு வந்தன.எமக்கு பொருத்தமான இடத்தில் காணி வழங்கினால் நாம் பள்ளிவாசலை அப்புறப்படுத்திக்கொள்ள தயார் என்று தெரிவித்து வந்தோம். அல்லாஹ்வின் ஏற்பாடு எமக்கு பொருத்தமான இடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபை காணி வழங்கியது.
முஸ்லிம்கள் நாம் ஏனைய சமூகங்களுடன் இணைந்து நல்லுறவுடனே வாழவிரும்புகிறோம். தம்புள்ளை புனித பூமி அபிவிருத்திக்கு எமது பள்ளிவாசல் தடையாக இருப்பதை நாம் விரும்பவில்லை. முஸ்லிம்கள் ஒருபோதும் அபிவிருத்திக்கும் இன நல்லுறவுக்கும் தடையாக இருக்க மாட்டார்கள். அதன் அடிப்படையில் பள்ளிவாசல் நிர்வாகம் புதிய இடத்தில் பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.
நாங்கள் பெரும்பான்மை சமூகத்துடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி இவ்விவகாரத்தைத்தீர்த்துக்கொண்டோம். 80 வருட கால வரலாறு கொண்ட எமது பள்ளிவாசலுக்குப் புதிய வடிவம் கிடைத்துள்ளது இவ்விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்ட வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் ஆகியோருக்கு பள்ளிவாசல் நிர்வாக சபை தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ரங்கிரி ரஜமகாவிகாரையின் முன்னாள் அதிபதி இனாமலுவே சுமங்கல தேரர் தற்போதைய அதிபதி அம்பகஸ்வெவ ராஹுல தேரர் ஆகியோரும் நன்றிக்குரியவர்கள் என்றார்.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை இடம்பெறவிருந்த சந்தர்ப்பத்தில் இனவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்று ஜும்ஆ தொழுகையும் நடத்தப்படவில்லை.
சர்வதேச ரீதியில் பேசுபொருளாகிய தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் விவகாரம் கடந்த ஒருதசாப்த காலமாக இழுபறியில் இருந்து வந்து கடந்த வாரம் தீர்பினை எட்டியுள்ளது. பள்ளிவாசல் நிர்வாக சபை சூட்சுமமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பள்ளிவாசலை அகற்றிக்கொள்வதில் அன்று மும்முரமாக செயற்பட்ட இனமலுவே சுமங்கல தேரர் புதிய பள்ளிவாசலின் நிர்மாணத்துக்கு நிதியுதவி அளித்துள்ளமையும் திறப்புவிழாவில் கலந்து கொண்டமையும் அல்லாஹ்வின் ஏற்பாடாகும்.-Vidivelli
Need more photoes to uploads inside and outsides.
ReplyDelete