சவூதியிலிருந்து பெருமளவு உல்லாச பயணிகள் வருகை
சவூதி அரேபியாவின் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது கடந்த மாதம் முதல் மீண்டும் அதிகரித்துள்ளதோடு எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கொவிட் 19 பெருந்தொற்று மற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி கட்டுப்பாடுகளை தொடர்ந்து சவூதி உல்லாசப் பயணிகளின் இலங்கைக்கான வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
தற்போது இலங்கைக்கு உல்லாசப் பயணிகளை கொண்டு வருவதற்கு முன்னெடுக்கப்படும் ஊக்குவிப்புகளின் பின்புலத்தில் சவூதி உல்லாசப் பயணிகளின் வருகையில் கடந்த மாதம் முதல் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைக்காகன சவூதி அரேபியாவின் புதிய தூதுவர் காலித் ஹமூத் அல் ஹஃதானி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.
அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயணக்காரவுடன் சவூதியில் தொழில்புரியும் இலங்கையர் தொடர்பிலும் இலங்கையருக்கான மேலதிக தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பலவிடயங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளிட்டவர்களுடனும் நல்லெண்ண சந்திப்புக்களையும் தூதுவர் நடாத்தியுள்ளார். இவை இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும்.
அதேநேரம் சவூதி அரேபியப் பயணிகள், விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான விசாவைப் பெற்று கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நிகழ்நிலை விசாவையும் பெறலாம். சமீபத்திய ஆண்டுகளில் சவூதி அரேபியாவிலிருந்து சுமார் 32 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி கட்டுப்பாட்டு நிலைகளால் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும் மீண்டும் சவூதி உல்லாசப் பயணிகள் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது எதிர்வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும்.
அதேநேரம் கொரோனா தொற்றுக்கு முன்னர் இலங்கை உம்ரா யாத்ரீகர்களின் சராசரி எண்ணிக்கை 32 ஆயிரத்தை எட்டியிருந்த அதேவேளை ஹஜ் யாத்திரிகர்களின் சராசரி எண்ணிக்கை 2600 ஆக காணப்பட்டது.
கொழும்பில் உள்ள எமது தூதரகம் இலங்கை பிரஜைகளுக்கு, கடந்த சில வருடங்களில், தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக சராசரியாக வருடாந்தம் 55 ஆயிரம் வீசாக்களை வழங்கியுள்ளது' என்றும் குறிப்பிட்டார்.
மர்லின் மரிக்கார்
Post a Comment