மேல் மாகாணம் அபாயகரமாகிறதா..? (முழு நாட்டினதும் இந்தவருட குற்றங்களின் விபரம்)
497 கொலைகள் நடந்துள்ளதாகவும் அதில் 223 துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக நடந்தவை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 37 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமேற்கு மாகாணத்திலிருந்து 13 வீதமும், தென் மாகாணத்திலிருந்து 10 வீதமும், சப்ரகமுவ மாகாணத்திலிருந்து 09 வீதமும், மத்திய மாகாணத்திலிருந்து 08 வீதமும் பதிவாகியுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் சொத்துக்களுக்கு எதிரான 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிராக 5,964 குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளன.
கடந்த 11 மாதங்களில் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் எனவும், இதில் 39 வீதமானவை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
மேலும், கொள்ளை சம்பவங்களில் 14 சதவீதம் வடமேற்கு மாகாணத்திலும், 13 சதவீதம் தென் மாகாணத்திலும் பதிவாகியுள்ளன.
பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற்ற பொலிஸ் பிரிவுகளில் களனி பொலிஸ் பிரிவிலேயே இவ்வருடம் அதிகூடிய குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 2,287 எனவும் அவர் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் 2,058 குற்றங்களும், நுகேகொட பொலிஸ் பிரிவில் 2,018 குற்றங்களும் பதிவாகியுள்ளன.
மேலும், நீர்கொழும்பு, கண்டி, குருநாகல், கல்கிஸ்ஸ, கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, குளியாபிட்டிய மற்றும் பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 1,000 இற்கும் அதிகமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த காலகட்டத்தில், 3,596 கடத்தல் வழக்குகள், 6,208 வீடுகள் உடைப்பு மற்றும் 2,159 கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் இலங்கையில் பாரிய குற்றச்செயல்களின் எண்ணிக்கை 4,336 ஆக அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், 31,098 கடுமையான குற்றங்கள் பதிவாகியுள்ளதுடன் 2021 இல் அந்த எண்ணிக்கை 35,434 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்று குறித்த அறிக்கை தெரிவிக்கிறது.
Post a Comment