காதி நீதிபதிகளாக, பெண்களையும் நியமிக்க நடவடிக்கை - விஜயதாஸ
(றிப்தி அலி)
காதி நீதிபதிகளாக பெண்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான திருத்தங்களை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ளதாக என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தற்போது வரையப்படுகின்ற முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் திருத்தச் சட்டமூலம் ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும் என அமைச்சர் கூறினார்.
விடிவெள்ளிக்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலின் போதே நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரமே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்த விடயத்துடன் தொடர்புடைய தரப்பின் பிரதிநிதிகள் ஆகியோரை பாராளுமன்றத்திற்கு அழைத்து கலந்துரையாடினேன்.
இச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அவர்களினால் இதன்போது அனுமதி வழங்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல், இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதற்கமைய, பலதார திருமண விடயத்தில் தற்போதைய சூழ்நிலையில் எந்தவித மாற்றமும் கொண்டுவரப்படமாட்டாது. அது போன்று காதி நீதிமன்ற முறையிலும் எந்த மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது. எனினும், இந்த முறைமையினை வினைத்திறனாக மேற்கொள்ள சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், காதி நீதிபதிகளாக பெண்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், காதி நீதிபதிகளின் தகமைகள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினாலேயே நிர்ணயிக்கப்படும்” என்றார்.
பாராளுமன்றத்தில் 1951ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டத்தில் கடந்த பல தசாப்தங்களாக எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவென 2009 இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால், ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
சுமார் 9 வருட கால இழுபறியின் பின்னர் இக்குழுவின் உறுப்பினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து அறிக்கைகளை சமர்ப்பித்தனர். இதனால், சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதில் இழுபறி தோன்றியது.
நீதி அமைச்சர்களாக 2009ஆம் ஆண்டின் பின்னர் பதவி வகித்த பலரும் இச்சட்டத்தை திருத்துவதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய போதிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில்தான் 2019 இல் “ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் திருத்தச் சட்டத்தையும், காதி நீதிமன்ற முறையினையும் இல்லாதொழிப்பதை தனது இலக்குகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியிருந்தது. அது மாத்திரமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், ஞானசார தேரரை தலைவராக கொண்டு தோற்றுவிக்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் சிபாரிசிலும் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் போதும் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்தவோ, ஒழிக்கவோ சாத்தியப்படவில்லை. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையுடன் இதில் திருந்தங்களை மேற்கொள்ள தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli
Post a Comment