Header Ads



நாங்கள் எதிர்பார்த்ததை விட முன்னேறிவிட்டோம், இது போதாது, ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வோம் - மொரோக்கோ பயிற்சியாளர்


“குரேஷியா அணிக்கு எதிர்காலம் குறித்த எந்தப் பயமும் இல்லை. இதை சகாப்தத்தின் முடிவாக நான் நினைக்கவிக்லை. 2024ஆம் ஆண்டு தேசிய லீக், யூரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடர்கள் உள்ளன. குரேஷியா அணிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்”.


மொராக்கோ அணியுடனான போட்டிக்குப் பிறகு குரேஷிய அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக் இவ்வாறு கூறினார்.


கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்றாவது இடத்திற்கான போட்டி நேற்று இரவு கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்தது. அரையிறுதியில் தோல்வியடைந்த குரோஷியா மற்றும் மொராக்கோ அணிகள் இப்போட்டியில் மோதின.


போட்டியின் 7ஆவது நிமிடத்திலேயே ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் குரேஷியா அணி வீரர் ஜோஸ்கோ க்வார்டியோல் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து போட்டியின் 9ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணி வீரர் அச்ரஃப் டாரி ஒரு கோல் அடிக்க போட்டி சமன் ஆனது.


போட்டியின் முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி விறுவிறுப்படைந்தது.


பின்னர், 42ஆவது நிமிடத்தில் குரேஷியா வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியின் முடிவில் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.


இரண்டாவது பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக முயற்சித்த நிலையில், இருவரது தடுப்பரண்களும் வலுவாக இருந்ததால் எந்தக் கோலும் அடிக்கவில்லை.


கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முடிவில் 2-1 என்ற கணக்கில் குரேஷியா அணி போட்டியை வென்றது.


பேரழிவாக இருந்திருக்கும்

போட்டியின் பிறகு பேசிய குரேஷியா அணியின் மேலாளர் ஸ்லாட்கோ டாலிக், "நாங்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றோம், அதில் தங்க அடுக்கு உள்ளது. இது நாங்கள் தங்கப் பதக்கம் வென்றதை போன்றது. மூன்றாம் இடத்துக்கான ப்ளே-ஆஃப் போட்டியில் தோல்வி கண்டிருந்தால் பேரழிவாக இருந்திருக்கும்” என்றார்.


4 மில்லியனுகும் குறைவான மக்கள் தொகை கொண்ட குரேஷியா இதுவரை 6 முறை ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியுடன் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதுவே உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் சிறந்த நிலையாகும்.


37 வயதான குரேஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிக் உட்பட பல மூத்த வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்க வாய்ய்புள்ளதால் இந்தத் தொடரில் கோப்பை வெல்ல முடியாதது அவர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.


மூத்த வீரர்கள் குறித்து பேசிய குரேஷிய அணியின் பயிற்சியாளர் டாலிக், “வயது காரணமாக எங்களது சில வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடர். ஆனால், எங்கள் அணியில் இளம் வீரர்கள் உள்ளனர். எனவே குரேஷியாவிற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்” என்றார்.


ஒரு நாள் உலகக் கோப்பை வெல்வோம்

கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டி வரை சென்ற முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையை இந்தத் தொடரில் மொராக்கோ பெற்றது.


அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியிடம் தழுவிய தோல்வியையடுத்து, மூன்றாம் இடத்திற்கான போட்டியில் குரேஷியாவை சந்தித்தது மொரோக்கோ. இந்தப் போட்டியில் அடைந்த தோல்வி அந்த அணியினருக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், எதிர்காலத்தில் நாங்கள் உலகக் கோப்பையை வெல்வோம் என அந்த பணியின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மொரோக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெகுராகி போட்டிக்குப் பிறகு பேசுகையில், “இந்த போட்டிக்கு முன்பு அனைவரிடமும் சந்தேகம் இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட முன்னேறிவிட்டோம். இது போதாது. எதிர்காலத்திற்கு இது முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாங்கள் அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளோம். ஆனால் மீண்டும் அதை செய்ய விரும்புகிறோம். தொடர்ந்து அரையிறுதி அல்லது காலிறுதியை எட்ட முடிந்தால் ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்வோம்” என்றார்.

No comments

Powered by Blogger.