Header Ads



நபி ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பையிட்டு ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி


இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சி ஆவார். அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக்கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும்.


அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பபை; பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.


'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா, அல் மஸீஹ் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களில் உள்ளவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார் என வானர்கள் கூறியதை எண்ணிப்பார்பீராக'. (ஸுறா ஆலு இம்ரான் : 45)



ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாத்தின் முக்கியமான நபிமார்களிலும் இறைத்தூதர்களிலும் ஒருவர் ஆவார்கள். முஸ்லிம்களாகிய நாம் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மற்றும் இறைத்தூதர்களுள் ஒருவர் என நம்புகின்றோம்.



ஏனைய இறைதூதர்களைப் போன்றே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அல்லாஹு தஆலா அவனது தூதுத்துவப் பணிக்காக தெரிவு செய்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.



நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்;. ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால் 'நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதேயாகும்... (ஸுறா அஷ்ஷுரா : 13)



புனித அல் குர்ஆனில் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி 25 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவரின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி 34 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு மத்தியில் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் காணப்படும் உயர்வையும் அந்தஸ்த்தையும் குறித்துக் காட்டுகின்றது.



உலகில் காணப்படும் அனைத்து மதங்களுக்குமிடையிலான பொதுவான அடிப்படைகளாக அன்பு, கருணை, சகோதரத்துவம், மனிதநேயம், நீதி, சமாதானம், சகிப்புத்தன்மை போன்றன காணப்படுகின்றன. மதங்களுக்கு மத்தியில் சுமுகமான உரையாடல்களையும் சமாதான சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு இவ்வடிப்படைப் பண்புகள் பெரிதும் துணைநிற்கின்றன.



இந்நாட்களில் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ சகோதரர்கள் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பை நினைவுகூர்கின்றனர். ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மற்றும் ஏனைய அனைத்து நபிமார்களும் உபதேசித்த உறுதிப்படுத்தப்பட்ட அழகிய போதனைகளை நாம் அனைவரும் பின்பற்றி செயற்படவும் அனைத்து மக்களும் நல்வழி, சமாதானம் மற்றும் அபிவிருத்தியை பெறவும் பிரார்த்திக்கிறோம்.


அஷ்-ஷைக் ஏ.எல்.எம்.றிழா

பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

பதில் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.