அரபுப் பிராந்தியத்தில் புதிய அத்தியாயத்தை, தொடங்கப் போகும் ரொனால்டோ - சவுதியில் இதுவரை யாரும் வாங்காத சம்பளம்
மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ சௌதி அரேபிய கிளப்பில் இணைய இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்து கொண்டிருந்தன.
சவுதி அரேபிய கிளப்பில் ஆடுவதற்காக கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோவுக்கு தருவதற்கு முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
இதன்படி ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கும் அதிகமாகச் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விளம்பர ஒப்பந்தங்களைச் சேர்த்தால் சுமார் 1,770 கோடி ரூபாய் அளவுக்கு அவரது வருமானம் இருக்கும் என்று தெரியவருகிறது. எனினும் இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
“புதிய கால்பந்து லீக்கில், வேறொரு நாட்டில் ஆடும் அனுபவத்தைப் பெறுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்” என்று இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ரொனால்டோ கூறினார்.
"ஐரோப்பிய கால்பந்தில் நான் வெற்றிபெற நினைத்த அனைத்தையும் பெற்றது எனது அதிர்ஷ்டம். ஆசியாவில் எனது அனுபவத்தைப் பெற இது சரியான தருணம் என்று உணர்கிறேன்."
சௌதி ப்ரோ லீக் கால்பந்தில் அல் நாசர் அணி 9 முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறது. ரொனால்டோவை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது பற்றி, “ஒரு வரலாறு படைக்கப்படுகிறது” என்று அந்த அணியின் நிர்வாகம் கூறியிருக்கிறது.
"எங்கள் லீக், நாடு, வருங்கால சந்ததியினர், சிறுவர்கள் மற்றும் பெண்கள் தங்களை சிறப்பாக உருவாக்கிக் கொள்ள இது ஊக்கமளிக்கும்" என்று கிளப் நிர்வாகம் கூறியது.
முன்னதாக மற்றொரு சவுதி அணியான அல் ஹிலால், ரொனால்டோவுக்கு சுமார் 3,050 கோடி அளித்து தங்கள் அணியில் சேருமாறு கோரியது. ஆனால் அப்போது அவர் மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் மகிழ்ச்சியாக இருந்ததால் அந்த கோரிக்கையை நிராகரித்தார்.
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதத்தில் பியர்ஸ் மோர்கனுக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவும், அணியில் இருந்து கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.
யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடி 145 கோல்களை அடித்த ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியில் சேர்ந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 2021 இல் மீண்டும் யுனைட்டட் அணியில் சேர்ந்தார்.
ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டி விட்டதாக இரு உள்ளூர் போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ரொனால்டோ சமீபத்தில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடினார். கானாவுக்கு எதிரான தனது அணியின் தொடக்க போட்டியில் கோல் அடித்ததன் மூலம் 5 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
ஆனால், நாக்அவுட் சுற்றில் போர்ச்சுகல்ஆடிய இரு போட்டிகளிலும் தொடக்கத்திலேயே களமிறக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டதும், காலிறுதியில் போர்ச்சுகல் தோற்று வெளியேறியதும் பெரும் சோகமாக அமைந்தன.
உலகக்கோப்பையில் இருந்து போர்ச்சுக்கல் அணி வெளியேற்றப்பட்டதும் ரொனால்டோ கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர்.
தனது அணியின் பயிற்சியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவரது தகுதி குறைக்கப்பட்டு ஒரு மாற்று வீரராக அதாவது சப்ஸ்டியூட் ஆக ஆட்டத்தில் இறக்கப்பட்டார் ரொனால்டோ.
உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு சிறிதுகாலம் முன்பு யுனெடெட் கிளப்பில் இருந்து ரோனால்டோ வெளியேறினார். ஆனால், கத்தாரில் அவரது தொடக்க ஆட்டங்கள் சிறப்பாகவே இருந்தன.
கானாவுக்கு எதிரான முதல் குழு போட்டியில் போர்ச்சுகல் அணியின் சர்ச்சைக்குரிய பெனால்டியில் அவர் வென்றார். ஃபிஃபா, அது முழுமையான நுண்ணறிவுத் திறனுடன் அடிக்கப்பட்ட கோல் என்று பாராட்டியது. ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பையும் ரொனால்டோ பெற்றார்.
ஆனால் அவரது பாதை ஒரே சீராக செல்லவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் எந்த கோலையும் அடிக்கவில்லை. அதற்குள் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. பின் தென் கொரிய அணியுடனான போட்டியில் மாற்று வீரராக பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
அதன் பின் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 16ஆவது இடத்தில் அவரின் பெயர் இருந்தது. 2008ஆம் ஆண்டு ரொனால்டோ முக்கிய போட்டிகளை விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்து அவ்வாறு அவர் அமர வைக்கப்பட்டது இதுவே முதல்முறை. அதேசமயம் அவருக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட கான்காலோ ரோமாஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தினார்.
அதேபோலதான் மொராக்கோ அணியுடனான போட்டியிலும் நடத்தப்பட்டார் ரொனால்டோ. ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் அதாவது 51ஆவது நிமிடத்தில் களமிறங்கினார் ஆனால் அப்போது ஏற்கெனவே மொராக்கோ அணி ஒரு கோல் அடித்து முன்னனியில் இருந்தது.
கோல் ஏதும் அடிக்கவில்லை என்றாலும் சர்வதேசப் போட்டிகளில் 196வது முறையாகத் தோன்றி குவைத் கால்பந்து வீரர் பதார் அல் முடாவாவின் சாதனையை சமன் செய்தார். ஆனால் இதை மறக்கமுடியாத ஒரு தருணமாக மாற்ற தவறவிட்டார் ரொனால்டோ. சர்வதேச அளவில் ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளில் 118 கோல் அடித்து சாதனை புரிந்திருந்தாலும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க அவரால் முடியவில்லை.
இறுதி விசில் ஒலிக்கப்பட்டதும் எதிரணியில் இருந்த சிலருடன் கைகுலுக்கி விட்டு, மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
கண்ணீருடன் விடைபெற்ற அதே அரபு பிராந்தியத்தில் மற்றொரு புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார் ரொனால்டோ. BBC
Post a Comment