ரொனால்டோ இனி தேவை இல்லையா...?
- எழுதியவர்,எம். மணிகண்டன் -
போர்சுகலின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் பார்த்திராத கடுமையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார். உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவிட்சர்லாந்துடனான நாக் அவுட் போட்டியில் முதல் 11 வீரர்களில் அவர் இடம்பெறவில்லை.
அவருக்குப் பதிலாக வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட கோன்கலோ ராமோஸை களமிறக்கினார் போர்சுகல் அணியின் மேலாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ்.
ரொனால்டோ இல்லாத நிலையில் போர்சுகல் அணி உலகக் கோப்பை போட்டிகளில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருப்பதால் அது அவருக்கு மேலும் கூடுதலான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி 6 கோல்களை அடித்தது. அதில் மூன்று கோல்களை ரொனால்டோவுக்குப் பதிலாகக் களமிறங்கிய ராமோஸ் அடித்ததுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
ரொனால்டோவின் ஆட்டம் என்பதற்காகவே இந்தப் போட்டியைப் பார்க்க வந்தவர்களும், தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இந்த முடிவால் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் இப்படியொரு அக்கினிப் பரீட்சையை இதற்கு முன் எந்த மேலாளரும் செய்திருக்க மாட்டார்.
பெஞ்சில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரொனால்டோ தனது அதிருப்தியை முகத்தில் வெளிப்படுத்தியைப் பார்க்க முடிந்தது. போட்டி முடிந்து தனது அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போதும் அவர் பெரிதாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.
முன்னதாக தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பெரும் தவறுகளைச் செய்திருந்தார் ரொனால்டோ. அதில் ஒன்று தென் கொரியா அணி கோல் அடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. மற்றொன்று கோல் அடிப்பதற்கான வாய்ப்பை தாமே தவற விட்டது.
அப்போது ரொனால்டோவுக்கு பதிலாக மாற்று வீரரை சான்டோஸ் களமிறக்கியபோதே, ரொனால்டோ தனது உடல்மொழி மூலமாக அதிருப்தியை வெளியிட்டார். இந்த முறை தொடக்கத்திலே அவர் களத்துக்குள் இறக்கப்படவில்லை.
அவர் பெஞ்சில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோதும் அவர்தான் தொலைக்காட்சி கேமராக்களுக்கு நட்சத்திரமாக இருந்தார். அவரது முக பாவனைகளை அவ்வப்போது திரையில் காட்டப்பட்டன.
5 கோல்கள் அடித்து போர்சுகல் அணி வலுவான முன்னிலையில் இருந்த போதுதான் கடைசி நேரத்தில்தான் ரொனால்டோ களமிறக்கப்பட்டார். அதிலும் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஒரு முறை வலைக்குள் பந்தைத் தள்ளியபோதும் அது ஆப்சைட் என அறிவிக்கப்பட்டது.
போட்டி முடிந்ததும் அரங்கில் இருந்த கூட்டத்தைப் பார்த்து கைதட்டிவிட்டு முதல் ஆளாக வெளியேறினார். போர்சுகல் வீரர்கள் தங்கள் அணி காலிறுதிக்குள் நுழைந்ததை கொண்டாடிக் கொண்டிருந்தபோதுகூட அவர் சேர்ந்து கொள்ளவில்லை.
சில காலமாகவே மேலாளர் சான்டோஸுக்கும் ரொனால்டோவுக்கும் இடையே உரசல் இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் அது மிகத் தீவிரமாக வெளிப்பட்டிருக்கிறது.
37 வயதான ரொனால்டோ 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். ஆனால் அவர் அணிக்காக போதிய பங்களிப்பைச் செய்யவில்லை என்ற புகார்கள் எழுவதைக் காண முடிகிறது.
தென்கொரியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவரது மிக மோசமான தவறுகளை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்போது சான்டோஸை எரிச்சலூட்டம் வகையில் ரொனால்டோவின் உடல் மொழி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்குப் பிறகே ரொனால்டோவை வெளியே அமர வைத்துவிட்டு பெரிதாக அனுபவம் இல்லாத இளம் வீரர் ராமோஸை களமிறக்குவது என சான்டோஸ் முடிவு செய்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் வெளியே இருந்தபோது ரொனால்டோவுக்கு இரண்டு வகையில் நெருக்கடி ஏற்பட்டது. ஒன்று தாம் இல்லாமல் போட்டியில் தோற்றுப் போனால் அணியுடன் சேர்ந்து வெளியேற வேண்டியிருக்கும். வெற்றிபெற்றால், அணிக்கு தனது தேவை இருக்காது.
இப்போது ரொனால்டோவுக்கு மாற்றாக களமிறக்கிய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்திருப்பதன் மூலம் அடுத்து வரும் போட்டிகளில் ரொனால்டோவின் பங்களிப்பு தேவையில்லை என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
ரொனால்டாவுடன் ஏதாவது பிரச்னையா என்று சான்டோஸிம் கேட்டபோது, “ரொனால்டோவுடன் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. 19 வயதாக இருந்தபோதே அவரை எனக்குத் தெரியும். அணியில் ஒரு முக்கியமான ஆட்டக்காரர் என்றே அவரைக் கருதுவேன்” என்று பதிலளித்திருக்கிறார்.
மொரோக்கோவுடனான காலிறுதிப் போட்டியில் ரொனால்டோ ஆடுவாரா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க சான்டோஸ் மறுத்துவிட்டார்.
“என்னிடம் உள்ள அனைத்து வீரர்களையும் பயன்படுத்துவேன். முதல் 11 ஆட்டக்காரர்களாக இல்லாவிட்டால் பின்னர் களமிறக்குவேன்” என்று கூறினார் சான்டோஸ். இதன் மூலம் மொரோக்கோவுடனான போட்டியிலும் தொடக்கத்தில் ரொனால்டோவை பெஞ்சில் அமர வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பை போட்டியே ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், அவருக்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
Post a Comment