Header Ads



சமஷ்டி தீர்வு தொடர்பில் கலந்துரையாடினோம், ஜனாதிபதி மறுப்பு தெரிவிக்கவில்லை என்கிறார் சம்பந்தன்


ஜனாதிபதியுடன் நேற்று (13) நடைபெற்ற நல்லிணக்கம் தொடர்பான கூட்டத்தில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


வடக்கு, கிழக்கில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய ஆட்சி முறை அரசியல், பொருளாதார, கலாசார ரீதியான தீர்வு வேண்டும் என்ற விடயத்தை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.


அரசியல் சாசன திருத்தங்களைக் கொண்டு வருவதாகக் கூறிய போதிலும், அது  இன்னும் நடைபெறவில்லை எனவும் மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட  வேண்டும் எனவும் மக்களிடையே ஜனநாயக ஆட்சி நிலவுவதாயின், மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தாமதமின்றி நடைபெற வேண்டும் எனவும்  காணி சுவீகரிப்பு நிறுத்தப்பட வேண்டும் எனவும் இராணுவத்தினர் தங்களின் தேவைகளுக்காக பெற்றுக்கொண்ட பொதுமக்களின் காணிகள் மீள வழங்கப்பட வேண்டும் எனவும் தாம் வலியுறுத்தியதாக இரா.சம்பந்தன் கூறினார். 


காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு  ஆற்ற வேண்டிய கடமைகளை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.


அரசியல் கைதிகள் விவகாரத்தை எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் முடிவிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவ்வாறு இடம்பெறுமாயின், அது அர்த்தமுள்ள அரசியல் தீர்விற்கு வழிவகுக்கும் எனவும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார். 


தாம்  முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கூறினார். 

No comments

Powered by Blogger.