மொட்டுக் கட்சி ஏமாற்றம் - ஜனாதிபதி வேண்டும் என்றே தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மாத்திரம் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைத்த போதிலும் பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து அந்த கட்சியினரின் அதிருப்தி அதிகரித்துள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் மாற்றங்களை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய போதிலும் நாளுக்கு நாள் அது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி வேண்டும் என்றே இதனை செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் மூத்த மற்றும் கனிஷ்ட உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வருவதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்களுக்கும் அமைச்சு பதவிகளை வழங்குவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்து வருவதாக மொட்டுக்கட்சியினர் கூறியுள்ளனர்.
அத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்கள் மூலம் தமது பிரதேசங்களுக்கு எந்த வேலைகளையும் செய்ய முடியாமல் இருப்பதால், மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான நளின்பெர்னாண்டோ போன்ற நபர்களுக்கு நேரடியாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வழங்கி, மொட்டுக்கட்சியின் மூத்த உறுப்பினர்களை புறந்தள்ளி இருப்பது அவமதிக்கும் செயல் எனக்கூறியுள்ள மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர், “ எமக்கு தற்போது அமைச்சு பதவி இருந்தாலும் பரவாயில்லை, இல்லாவிட்டாலும் பரவாயில்லை” என்று கூறும் அளவுக்கு கட்சிக்குள் நெருக்கடி உக்கிரமடைந்திருப்பதாக மொட்டுக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
புது வருடத்தின் ஆரம்பத்தில் அமைச்சு பதவிகளை வழங்கினால் பரவாயில்லை என்ற எதிர்பார்ப்பில் மொட்டுக்கட்சியினர் இருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னரும், பின்னரும் அமைச்சரவை மாற்றம் என்ற கதை பரலாக பேசப்பட்டு வந்தது.
Post a Comment