Header Ads



ஜப்பானின் சலுகையை வேண்டாமென்றது இலங்கை - பற்றிப்பிடித்த பங்களாதேஷ் அடையப்போகும் மேம்பாடு


ஜப்பானின் சலுகை வட்டியின் கீழ் வழங்கப்பட்ட இலகு ரக தொடருந்து திட்டத்தை இலங்கை ஆட்சியாளர்கள் நிறுத்திய நிலையில், ஜப்பானின் இந்த நிதியுதவியுடன் பங்களாதேஷில் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரக மோனோ ரயில் திட்டத்தின் முதலாவது கட்டப்பணிகள் முடிவடைந்து, ரயில் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.


சன நெருக்கடிமிக்க பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தூண்களுக்கு மேல் ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படும் இலகு ரக மோனோ ரயில் திட்டப் பணிகளின் முதல் கட்டம் முடிவடைந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. tw


நிறைவு செய்யப்பட்ட 20 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நகர மோனோ ரயில் சேவை திட்டத்தின் முதல் கட்ட  பகுதியின் ரயில் சேவைகளை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று  ஆரம்பித்து  வைத்தார்.


இந்த இலகு ரக மோனோ ரயில் சேவையானது வடக்கு டாக்காவின் மத்தியில் அமைந்துள்ள அரச அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் உட்பட முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


இறுதியாக கட்டப்பணிகள் டாக்கா நகரின் ஊடாக தெற்கு Motijheel நிதி நகரம் வரை மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட உள்ளன. இந்த இலகு ரக மோனோ ரயில் சேவை திட்டமானது டாக்கா நகர மக்கள் பயணம் செய்யும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


மேலும் இந்த திட்டம் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான சாதகத்தை பெற்றுக்கொடுக்கும் எனவும் நம்பப்படுகிறது.


டாக்கா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜப்பான் நிதியுதவியுடனான இந்த இலகு ரக மோனோ ரயில் சேவை திட்டமானது 10 ஆண்டுகளை உள்ளடக்கியது. 2030 ஆம் ஆண்டு நிறைவடையும் இந்த திட்டத்தின் கீழ் டாக்கா நகரம் ஊடாக பயணிக்கும் ஆறு மோனோ ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட உள்ளதுடன் 100 ரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன.


எது எப்படி இருந்த போதிலும் இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஜப்பானின் நிதியுதவியுடன் இலகு ரக மோனோ ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச இந்த திட்டத்தை இரத்துச் செய்தார். இந்த திட்டம் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் சிறியளவிலான ராஜதந்திர ரீதியான மனகசப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 


இலங்கையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், தற்போது அது முடிவடைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.