Header Ads



தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி வலியுறுத்தல்.


நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்துக்காக நாட்டைத் தயார்படுத்த தான் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


இளைஞர் சந்ததியினருக்கு உதவும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில், டிஜிட்டல் அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகள் குறித்தே நாம் கவனத்திற் கொள்ள வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.அதற்கமைய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர்களை நியமிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.மாவட்டம் 306 சி2 ,இன் லியோ ஆட்சேர்ப்பு மற்றும் லியோ தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (11) முற்பகல் கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடு முழுவதுமிருந்து 6,500 புதிய வியோக்கள் சங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில், 


2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக  இளைஞர்களுக்கான தேசிய அடித்தளமொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களை அதில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.  

உலகளாவிய நெருக்கடியான காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்தைக் கருத்திற்கொண்டு, அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள செயல்பாட்டுக்கு வழிவகுக்குமாறும் ஜனாதிபதி இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார். 


இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் லியோ இந்துனில் உதார பளிஹவதன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் நினைவுச் சின்னங்களைப் பரிசளித்தார். மேலும் லியோ உறுப்பினர்களுக்கான விருதுகளையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.


கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் எம்.வி.எஸ் குணதிலக்க, முன்னாள் மாவட்ட ஆளுனர் லயன் லசந்த குணவர்தன, மாவட்ட ஆளுநர் லயன் பெனட் கமலத் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவத் தலைவன் லியோ கவீஷ ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்விலல் கலந்து கொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

11.12.2022

1 comment:

  1. டிஜிட்டல் கதையைப் போட்டு இளைஞர்களை மடக்கிவைக்க மற்றொரு சூழ்ச்சியை அழகாக வகுத்திருக்கின்றார் புதிய சனாதிபதி. அரகலயவை தந்திரமாக அடக்கியது போல் இளைஞர்களையும் மடக்கி அவருடைய பொக்கட்டுகளில் போட்டுக் கொள்வார். இந்த நாட்டு அரசியலின் பின்னணி தந்திரமும், பொய்யும், புரட்டும், ஏமாற்றும் தான். அதை தந்திரமாகவும், மனிதர்களை மந்திரமாகவும் தந்திரமாகவும் மாற்றுவதற்கு தகுதியான தந்திரகாரன் தான் இந்த சனாதிபதி. ஆனால் அந்த பேராசை பிடித்த கோதா மடையனுக்கு இவருடைய தந்திரங்கள் நிச்சியம் புரியாது. புரியும் மூளையும் கொஞ்சம் கூட இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.