வல்லரசுகளை தகர்த்து, சாதனையை நிலைநாட்டிய கத்தார் - இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த உலகக்கோப்பை என 78 சதவீதம் பேர் வர்ணிப்பு
பா 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடந்து முடிந்த நிலையில், இந்த 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட தொடர் என்ற பெருமையை, கத்தார் உலகக்கோப்பை பேட்டித்தொடர் பெற்றுள்ளது.
இதுவரை நடைபெற்ற 6 பிபா உலகக்கோப்பை தொடர்களில் சிறந்த தொடர் எதுவென்று உலக செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில் 78 சதவீதம் மக்கள் கத்தார் என வாக்களித்து உள்ளார்கள்.
மற்ற உலகக்கோப்பை தொடர்கள் ஒற்றை இலக்க சதவீதத்திலேயே வாக்குகளை பெற்று உள்ளன.
வளைகுடா நாடான கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆரம்பமானது.
தகுதிச்சுற்று போட்டி முடிந்து 32 அணிகள் குழுநிலை சுற்றுக்கு தேர்வாகின. சர்வதேச கால்பந்து அணிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு இதில் விளையாடி வந்தன. இதில் ஆர்ஜெண்டினா , மொராக்கோ, குரோஷியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அதில் ஆர்ஜெண்டினா , பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஆர்ஜெண்டினா அணி பெனால்டி முறைப்படி பிரான்ஸை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்றது.
இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளிலேயே மிகச்சிறந்த இறுதிப்போட்டியாக இது பார்க்கப்படுகிறது. 1963 ஆம் ஆண்டு பிபாவின் அங்கீகாரத்தை பெற்ற கத்தார், இதற்கு முன் ஒருமுறைக்கூட உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்றது இல்லை.
ஆனால், பிபா குழுமம் 2022 உலகக்கோப்பை தொடரை கத்தாரில் நடத்த கடந்த 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. கால்பந்து தொடரில் அதிகம் சாதிக்காத, பெரிய கால்பந்து மைதானங்கள், உள்கட்டமைப்புகள் இல்லாத கத்தாரில் எப்படி இப்படிப்பட்ட தொடரை நடத்த முடியும் என பலரும் கேள்வி எழுப்பினர்.
வல்லரசு நாடுகள், கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் நாடுகள் இத்தொடரை நடத்த போட்டிப்போட்டனர். ஆனால், கத்தாரிடம்போய் கால்பந்து உலகக்கோப்பையை நடத்தும் பொறுப்பை வழங்குவதா என பலரும் கேள்வி எழுப்பினர்.
அனைத்து எதிர்ப்புகளுக்கு செயலால் கத்தார் பதிலடி கொடுத்தது. பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நாட்டு அரசு செலவிட்டு உள்ளது.
இதுதான் இதுவரை அதிக செலவில் நடைபெற்ற பிபா உலகக்கோப்பை தொடராகும். 8 கால்பந்து மைதானங்கள், நெடுஞ்சாலைகள், நட்சத்திர விடுதிகள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை, சுரங்க பாதைகள், கால்பந்து ரசிகர்கள் தங்குவதற்கென விளையாட்டு நகரங்கள், மேம்படுத்தப்பட்ட சாலைகள் என உள்கட்டமைப்புகளை அமைத்து நாட்டையே கத்தார் மாற்றியது.
ஆனால், தொடர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பிலிருந்தே ஏராளமான கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக ஊடகங்களில் குற்றம்சாட்டப்பட்டன.
உலகக்கோப்பை முன்பதிவு இணையதளத்தில் இஸ்ரேல் பெயரை சேர்க்காமல் பாலஸ்தீன் என்று குறிப்பிட்டது, ஓரினச்சேர்க்கைக்கு தடை, மதுபான தடை போன்ற காரணங்களால் கத்தாருக்கு எதிரான செய்திகளே ஊடகங்களில் நிறைந்து இருந்தன.
அதே சமயம் ரசிகர்களும், விளையாட்டு வீரர்களும் பிபா உலகக்கோப்பைக்காக கத்தார் செய்த ஏற்பாடுகள் மற்றும் வரவேற்பை வெகுவாக பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த நிலையில் சர்வதேச ஊடகம், இந்த 20 ஆம் நூற்றாண்டில் இதுவரை நடைபெற்ற மிகச்சிறந்த பிபா உலகக்கோப்பை தொடர் எது என்று வாக்கெடுப்பை நடத்தியது.
இதில் கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடர் 3% வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 2006 ஜெர்மனி தொடர், 2018 ரஷியா தொடருக்கு தலா 4% பேர் வாக்களித்து உள்ளன.
2014ல் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கு 5% பேரும், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் 2002 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கு 6% பேரும் வாக்களித்து உள்ளனர்.
இதில் மற்ற தொடர்களால் அருகில் கூட நெருங்க முடியாத அளவுக்கு கத்தார் 2022 பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரை இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த உலகக்கோப்பை என 78 சதவீத கால்பந்து ரசிகர்கள் வாக்களித்து உள்ளார்கள்.
வெளிநாட்டு ஊடகங்களின் ஏராளமான எதிர்மறை கருத்துக்களுடன் தொடங்கிய உலகக்கோப்பைக்கு இவ்வளவு பேர் ஆதரவளித்து இருப்பது ஆச்சரியம் அளித்து உள்ளது. ibc
Post a Comment