ஜனவரி 3 ஆம் திகதி முக்கிய தீர்ப்பு வெளியாகிறது
மன்னார் பள்ளிமுனை மீனவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவர்களின் காணிகளை ஆக்ரமித்துள்ள இலங்கை கடற்படையினருக்கு எதிராக பாதிக்கப்பட்ட 24 மீனவக் குடும்பத்தினர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தனித்தனியாக வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினருக்கு எதிராக கடந்த 2013 பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட மேற்படி வழக்குகளின் விசாரணைகள், மன்னார் மாவட்ட நீதிமன்றில் தொடர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறித்த வழக்குகளின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி மன்னார் நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளது.
மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதி மக்களுக்குச் சொந்தமான வீடுகளில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ள நிலையில் குறித்த கடற்படை முகாமினால் காணிகளையும் வீடுகளையும் இழந்த மக்கள் தமது இருப்பிடங்களில் இருந்து கடற்படையினர் வெளியேறி தமது வீடுகளையும் காணிகளையும் தம்மிடம் மீளக்கையளிக்க கட்டளையிடவேண்டும் என மன்னார் மாவட்ட நீதிமன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு 24 வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் குறித்த வழக்குகள் கடந்த ஒன்பது வருடங்களாக மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் குறித்த வழக்குகளின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 20ஆம் திகதியன்று வழங்கப்படவிருந்தது.
எனினும் அன்றைய தினம் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் ஆகியோர் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் தமக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படுதல் வேண்டும் எனும் கோரிக்கையை நீதிமன்றில் முன்வைத்தனர். இந்த நிலையில் மன்னார் நீதிமன்றம் பள்ளிமுனையில் நிலைகொண்டுள்ள இலங்கை கடற்படையினருக்கு எதிரான வழக்குகளை இறுதி தீர்ப்பிற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.
கடந்த 1990ஆம் நிகழ்ந்த கடும் யுத்த நடவடிக்கையினால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
இலங்கையின் தென் பகுதிக்கும், இந்தியாவின் தமிழ்நாட்டிற்கும் இடம்பெயர்ந்தனர். இச்சூழ்நிலை யில் பள்ளிமுனையைச் சேர்ந்த மக்களும் தமது பூர்வீக இருப்பிடங்களைவிட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இதையடுத்து இடம்பெயர்ந்த பள்ளிமுனை மக்களின் வீடுகளில் இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலைகொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் பள்ளிமுனை மக்களின் குறித்த வீடுகளில் இலங்கை கடற்படையினர் முகாமிட்டனர். பின்னர் கடற்படையினர் தாம் நிலைகொண்டிருந்த பகுதிகளை விஸ்தரித்து பாரிய கடற்படை முகாமொன்றினை பள்ளிமுனையில் அமைத்தனர்.
இந்த நிலையிலே மன்னார் பள்ளிமுனையில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் காணிகளில் இருந்து கடற்படையினர் வெளியேறி, தமது காணிகளும், வீடுகளும் தம்மிடம் மீளக்கையளிக்கப்படல் வேண்டும் என தமது சட்டத்தரணிகள் ஊடாக பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் சுமார் ஒன்பது வருடங்களாக குறித்த வழக்குகள் மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.
இவ்வாறான நிலையில் பள்ளிமுனை பகுதியில் பொதுமக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் அங்கிருந்து வெளியேற முடியாது என கடற்படையினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கோரிக்கைகளை மன்னார் நீதிமன்றில் தொடர்சியாக முன்வைத்திருந்தனர். தேசிய பாதுகாப்பு மற்றும் மன்னார் மாவட்ட கரையோரப்பகுதிகளை மையமாக கொண்டு நடைபெறும் போதைவஸ்து கடத்தல் உட்பட பல சட்டவிரோத நடவடிக்கைகளை கடற்படையினர் தடுக்கவேண்டிய நிலையில் பள்ளிமுனைப்பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை கடற்படையினரை அங்கிருந்து விலக்கிகொள்ளமுடியாதென கடற்படையினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றில் தெரிவித்து வந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே குறித்த வழக்குகள் தொடர்பாக அதன் மனுதாரர்களான, பள்ளிமுனை மக்கள், கடற்படை முகாமிற்காக சுவிகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளுக்கு, நஷ்டஈட்டினை பெற்றுக்கொள்வதற்கு, நீதிமன்றில் இணக்கம் தெரிவித்தனர். மேலும் கடற்படையினரால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள தமது காணிகள் மற்றும் அதில் அமைந்துள்ள வீடுகள் ஆகியவற்றின் தற்போதைய பெறுமதியான தலா 60 லட்சம் ரூபாவினை மனுதாரர்களான தமது ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக அரசாங்கம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகளைத் தனிதனி பிராதுகளாக தமது வழக்குகளில் இணைத்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிமுனை கடற்படையினருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி மன்னார் மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளது.
Post a Comment