Header Ads



மொரோக்கோ அணிக்கு 25 மில்லியன் டொலராக பரிசளிப்பு, கடைசி இடம் வந்த அணிக்கே 74 கோடி ரூபாய் பரிசு


மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப்போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது.


கடைசி நிமிடம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இறுதிப்போட்டியில் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸ் அணியை வென்று கோப்பையைத் தனதாக்கியது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.


உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா ரசிகர்களும் மெஸ்ஸி ரசிகர்களும் இந்த வெற்றியைச் சிலாகித்துக் கொண்டாடி வருகின்றனர்.


சுமார் ஒருமாத காலம் நடந்து நேற்று முடிவுக்கு வந்துள்ள இந்த விளையாட்டு திருவிழாவானது மக்களுக்கான பொழுதுபோக்கு என்பதைக் கடந்து கோடிகளில் பணம் புரளும் ஒரு வணிகமும் ஆகும்.


பல நூறு கோடிகள் வணிகத்தைக் கொண்ட இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு அவர்கள் பெறும் இடத்தை பொறுத்து பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் கணிசமாக உயர்த்தப்பட்டுவரும் இந்த பரிசுத்தொகையானது இவ்வருடம் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் அலுவல்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை பிபிசி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது.


கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 358 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த பரிசுத்தொகை 2018ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் 400 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இந்த தொகையுடன் மேலும் 40 மில்லியன் டாலரைச் சேர்த்து இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை பரிசாக வழங்கியுள்ளது ஃபிஃபா. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 3,640 கோடி ரூபாய் ஆகும். இந்த மொத்த பரிசுத்தொகையில், கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு சுமார் 347 கோடி ரூபாய் (42 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் அணிக்கு சுமார் 248 கோடி ரூபாய் (30 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.


மேலும், இத்தொடரில் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்த குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் முறையே 27 மில்லியன் மற்றும் 25 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெறுகின்றன.


இவை மட்டுமல்லாமல், ஐந்து முதல் எட்டாம் இடம் வரை பிடித்த ஒவ்வொரு அணிக்கும் தலா 17 மில்லியன் அமெரிக்க டாலரும், ஒன்பதாவது முதல் பதினாறாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா 13 மில்லியன் அமெரிக்க டாலரும் வழங்கப்படும்.


பதினேழாவது இடம் முதல் முப்பத்திரண்டாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி ரூபாய்) வழங்கப்படுகின்றன. கூடுதலாக, ஒவ்வொரு தகுதி பெற்ற அணியும் போட்டிக்கு முன்னதாக 1.5 மில்லியன் அமெரிக்க டாலரை தயாரிப்பு செலவுகளுக்காகப் பெறுகின்றன. கடந்த 1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை நான்கு மில்லியன் டாலராக இருந்தது. 28 ஆண்டுகள் இடைவெளியில் இது 42 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, கோப்பையை வென்ற அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. இப்பரிசுத் தொகை 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முறையே 38 மில்லியன் டாலர் மற்றும் 28 மில்லியன் டாலராக உயர்ந்தது.


ஆடவருக்கான கால்பந்து உலகக் கோப்பை பரிசுத்தொகை ஒருபுறம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருந்தாலும், மகளிர் கால்பந்துக்கான பரிசுத்தொகையிலோ வணிகத்திலோ இதே அளவு வளர்ச்சி இருக்கிறதா என்றால் கேள்விக்குறியே. 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற உள்ள மகளிர் கால்பந்து உலகக் கோப்பையில் மொத்தம் 60 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது. 2022 கத்தார் உலகக்கோப்பையில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட இது சுமார் ஏழு மடங்கு குறைவு. 2019ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் மொத்த பரிசுத்தொகை 30 மில்லியன் டாலர் மட்டுமே இருந்த நிலையில், 2023 உலகக்கோப்பையில் இது 60 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.