Header Ads



இந்தியாவின் இருமல் மருந்தை அருந்திய 18 குழந்தைகள் மரணம் - உஸ்பெகிஸ்தானில் சோகம், நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.


இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்ற இருமல் மருந்த உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த மருந்து இந்தியாவின் நொய்டா நகரில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாங்கள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


உயிரிழந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக 2 முதல் 7 நாட்கள் வரை அன்றாடம் 2.5 ml முதல் 5 ml அருந்தியுள்ளனர். அன்றாடம் மூன்று முதல் 4 முறை இந்த மருந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் மருந்துக்கடைக்காரர்கள் பரிந்துரையின்படி பெற்றோர் இந்த மருந்தினை குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் இருந்து Doc-1 Max மருந்தை அரசு திரும்பப்பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் அரசின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு கூட்டமைப்பின் வடக்கு மண்டலம் தெரிவித்துள்ளது.


கடந்த ஒக்டோபர் மாதம் ஆபிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து அருந்திய 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.


மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ஆகிய 4 மருந்துகள் தான் காம்பியா குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது.


இந்தியாவின் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பிய தகவலின்படி சம்பந்தப்பட்ட நிறுவனம் மாசுபட்ட மருந்துகளையே காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பது உறுதியானது.


இந்நிலையில் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.  

No comments

Powered by Blogger.