Header Ads



10 நாட்கள் ஓடிவிட்டன, பல தகவல்கள் வெளியாகின - தினேஷ் ஷாப்டரின் படுகொலை மர்மம்


படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரம், பத்து நாட்கள் கடந்தும், மர்மம் நீடித்து வருகிறது.


கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலகக்குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் நடைபெறுகின்றன. குற்றப்புலனாய்வு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன.


எனினும், இதுவரை சந்தேக நபர்கள் எவரும் உறுதியான சாட்சியங்களின் பிரகாரம் அடையாளம் காணப்படவில்லை. இதனாலே, விசாரணைகள் தொடர்கின்றன.


அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குழு, இலக்கம் 39 , பிளவர் வீதி கொழும்பு


- 07 எனும் முகவரியில் அமைந்துள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்கு (24) சென்று பகுப்பாய்வு செய்திருந்தது.


இதன்போது, தினேஷ் ஷாப்டரின் கழுத்தை இறுக்க பயன்படுத்தப்பட்டிருந்த வயராகச் சந்தேகிக்கப்படும்


வயரை கண்டெடுக்கப்பட்டது. ஷாப்டரின் தாயாரின் வீட்டுத் தொலைக்காட்சி அன்டனா வயரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


இதனைவிட கைகளைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒருவகை பிளாஸ்டிக் போன்ற 08 பட்டிகள் ஷாப்டரின் மேஜை இலாச்சியிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.


இன்னும்,ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதமொன்றும், அதனை ஒத்த குறுஞ்செய்தி தொடர்பிலும் அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.


பல நிறுவனங்களின் உரிமையாளரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாவை பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்திருந்தார்.அவற்றினால் எதிர்பார்த்தபடி இலாபமீட்ட முடியாமல் நாளுக்கு, நாள் அவரது வியாபாரம் நஷ்டமடைந்து வருவதும் நெருங்கிய சிலரின் வாக்கு மூலங்களூடாக தெரியவந்துள்ளது.


நுவரெலியா பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான காணியொன்று, மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டமை, யாழ். பிரதேச அரசியல்வாதி ஒருவருடன் இணைந்து முன்னெடுத்த வர்த்தக நடவடிக்கையில் 85 கோடி ரூபாவை முதலீடு செய்து அதனை மீளப் பெற முடியாமல் போனமை, பிரயன் தோமஸுடன் தொடர்புபட்ட 143 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கலென பல கோடி ரூபாக்களை ஷாப்டர் இழந்துள்ளதாக குடும்பத்தார் மற்றும் நெருங்கிய சிலரின் வாக்கு மூலங்களில் தெரிய வந்துள்ளது.


ஷாப்டர் வசித்த கறுவாத்தோட்டம், பிளவர் வீதியிலுள்ள வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தமை தொடர்பிலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்திலிருந்து தெரியவந்துள்ளது.


இவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் குடும்பத்தரின் வாக்கு மூலங்கள் பலவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் மரணம் தற்கொலையா? என்ற கேள்வி ஊடகங்கள் வாயிலாக எழுப்பட்டுள்ளன.


எனினும், விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தில் இருக்கும் இத்தருணத்தில், கொலையா, தற்கொலையா என்ற முடிவுக்கு வர முடியாது.இதைத் தீர்மானிக்க போதுமான தடயங்கள் இல்லையெனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.