Header Ads



104 மியான்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டனர் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்


பங்களாதேஷில் இருந்து படகு மூலம் தப்பிச் சென்ற 104 மியான்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.


இலங்கை கடற்பரப்பில் வெந்தலை தீவுக்கு அப்பால், பருத்தித்துறையில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் ஒரு பெரிய மீன்பிடி படகை அவதானித்த மீனவர்கள் உடனடியாக வடக்கு கடற்படை கட்டளைக்கு தகவல் வழங்கியதையடுத்து கடற்படையினர் 3 படகுகளை அந்த இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


சனிக்கிழமை (17) மாலை வேளையில் மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, கடற்படையினரால் மீட்கப்பட்ட குறித்த படகு, காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அருகில் சனிக்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டது.


பாதுகாப்பு அமைச்சின் அனுமதி, ஞாயிற்றுக்கிழமை (18) காலை கிடைத்ததைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் கடற்படையினரால் முகாமிற்கு மாற்றப்பட்டதுடன், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட நான்கு பேர் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்ற போது, தமது மீன்பிடி படகு நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாக, மிதக்கத் தொடங்கியதாக கூறிய அவர்கள், ஐக்கிய நாடுகள் வழங்கிய அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.


கடற்படை, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் காரியாலயம், பொலிஸார் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் அதிகாரிகள், குறித்த நபர்களை முகாமில் தங்கவைப்பது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.


நீர்கொழும்பில் உள்ள அகதிகள் முகாமுக்கு அவர்களை மாற்றுவதே சிறந்தது என பொலிஸார் தெரிவித்த நிலையில், மீட்கப்பட்டவர்களை இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு காங்கேசன்துறை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.