Header Ads



மர்ஹும் மொகிதீன் பேக் இலங்கை வந்து 100 வருட நிறைவு, பிரதமர் தலைமையில் பிரமாண்ட விழாவை நடத்த தீர்மானம்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


மர்ஹும் மொகிதீன் பேக் இலங்கைக்கு வருகை தந்து 100 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் விழா ஒன்றை எடுப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தீர்மானித்துள்ளார்.


மர்ஹும் மொகிதீன் பேக்கினது மகள்  மொய்னா பேக்குக்கு அகில இலங்கை சமாதான நீதவான் பதவி வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில்  புதனன்று நடைபெற்றது.


பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொகிதீன் பேக் நாட்டுக்கு வருகை தந்து ஆயிரக்கணக்கான பௌத்த மற்றும் பாடல்களைப்பாடி அளித்த அன்பளிப்புக்கு கௌரவம் செய்வதற்காக ஒரு பிரமாண்டமான விழாவை நடாத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் தொழிலதிபர் எம்.ஏ.சி. மஹ்தூம், மொய்னா பேக் உட்பட மொகிதீன் பேக்கினது குடும்பத்தினர்கள்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


பிரதமர் மொகிதீன் பேக்குக்கும் தனக்கும் அவருடைய குடும்பத்துக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளைப் பற்றி இங்கு விரிவாக கருத்துகளைத் தெரிவித்தார்.


மொகிதீன் பேக் ஆற்றிய சேவை அளப்பரியது. அது நினைவு கூரப்பட வேண்டும். எனவே, பிரதமர் அலுவலகம் பிரம்மாண்டமான ஒரு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.


மொகிதீன் பேக் பாடிய சில பாடல்களையும் மொய்னா பேக் அங்கு பாடிக் காண்பித்தார்.


அரச அனுசரணையோடு இந்த விழாவை ஜனவரி மாத நடுப்பகுதியில் நடாத்துவது பற்றியும் ஆராயப்பட்டது.


தொழிலதிபர் எம்.ஏ.சி. மஹ்தூமினால் பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்ட மீடியா டைரியும்,  பேராசிரியரும் இந்திய சட்ட சபை உறுப்பினருமான எம்.எம். ஜவாஹிருல்லா எழுதி அண்மையில் இலங்கையில் வெளியிட்ட நூலும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.


பிரதமரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான, யதமினி குணவர்தனமும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.