Header Ads



UNP வசமுள்ள ரோஹன விஜேவீரவின் அஸ்தியை, JVP இதுவரை பெற்றுக் கொள்ளாதது ஏன்..?


 தம்மிடம் உள்ள ரோஹன விஜேவீரவின் அஸ்தியை பெற்றுக் கொள்ளுமாறு விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.

அஸ்தியை பெற்றுக் கொள்வதாக விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர சில மாதங்களுக்கு முன்னர் உறுதியளித்த போதிலும் அவர் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டு இந்த நவம்பர் 13 ஆம் திகதி முப்பத்து மூன்று வருடங்கள் ஆகின்றன. அவரை நினைவு கூர்ந்து , ஜே.வி.பி ஆண்டுதோறும் இல்மஹா விரு சமருவ என்ற அஞ்சலி விழாவையும் நடத்தி வருகிறது.


சுட்டுக்கொல்லப்பட்ட ரோஹன விஜேவீரவின் பூதவுடல் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்ட பின்னர் அவரது அஸ்தி மயான ஊழியர் ஒருவரினால் ஜனக மல்லிமாராச்சிக்கு வழங்கப்பட்டது. ஜே.வி.பி அதை ஏற்க மறுத்ததே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது .


விஜேவீரவின் அஸ்தியை ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை. விஜேவீரவின் மனைவியும் ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தைகள் ஏற்றுக்கொள்ள வில்லை. இறுதியில், நான் அஸ்தியின் உரிமையாளர் ஆகிவிட்டேன் . எனது அரசியலுக்கு விஜேவீர சிறிதும் பொருந்தாவிட்டாலும், இந்த மனிதனின் எச்சங்கள் எமது கலாச்சாரத்தின் அங்கமாக மதிக்கப்பட வேண்டும். அதனால்தான் அஸ்தியை இரகசிய இடத்தில் பாதுகாப்பாக புதைத்துள்ளேன்’ என ஜானக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார் .


ஜானக, ஆர். பிரேமதாச ஆட்சிக் காலத்தில் பலம் பொருந்திய அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதிக்கு விருப்பமானவருமான, மறைந்த வீரசிங்க மல்லிமாராச்சியின் மகனாவார். ஜனக மல்லிமாராச்சியின் சகோதரரான ஜனந்த மல்லிமாராச்சி, ஜே.வி.பி ஆயுததாரிகளால் கொல்லப்பட்டார்.


நன்றி – அருண

No comments

Powered by Blogger.