Header Ads



ஓமானில் விற்கப்பட்ட இலங்கை பெண்கள் - CID விசாரணை ஆரம்பம்


வீட்டு பணிப்பெண்களாகவும் ஏனைய தொழில்களுக்காகவும் வௌிநாடுகளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு, பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


இது தொடர்பிலான விசாரணைகளுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் தலைமையிலான குழு ஓமானுக்கு சென்று விசாரணைகளை நடத்தியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


ஓமானில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறி  சில வௌிநாட்டு முகவர் நிறுவனங்கள் பெண்களை அந்நாட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளன.


அவர்களில் அநேகமானவர்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.


அங்குள்ள தொழில் முகவர் நிலையத்தில் பெண்களை வரிசைப்படுத்தி வயது, தோற்றத்திற்கு அமைய பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யப்பட்டமை பொலிசாரின் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. 


ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தில் நடத்திச்செல்லப்படுகின்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள 90-க்கும் மேற்பட்ட பெண்களில் இந்த ஆட்கடத்தலில் சிக்கிய பெண்களும் இருப்பதாக ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்தது.


குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தூதரகம் குறிப்பிட்டது.

No comments

Powered by Blogger.