கஞ்சாவை ஏற்றுமதி செய்து, டாலர்களை சம்பாதிக்க முடியுமா..? அபாயகர அதிகாரி றஸாட் கூறும் முக்கிய விடயங்கள்
கஞ்சாவை ஆயுர்வேதத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தும் போது, அதிலுள்ள நஞ்சை முறிப்பதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கஞ்சாவை புகைப்பதன் மூலமாகவோ, அல்லது நஞ்சை முறிக்காமல் வேறு வகையில் பயன்படுத்துவதன் மூலமாகவோ அது மருந்தாக அமையாது என்று கூறும் அவர், "டெட்ரா ஹைட்ரோ கனபினோல் இருக்கத்தக்க நிலையில் கஞ்சாவை பயன்படுத்தினால், அது கஞ்சாவுக்கு அடிமையாகும் (Addiction) நிலையை ஏற்படுத்தி விடும்" என்கிறார்.
”நோயைக் குணப்படுத்த, தடுக்க, கண்டுபிடிப்பதற்காகவே மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மூன்று நோக்கங்களைத் தவிர, வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் எதுவும் மருந்தாக அமையாது” என அவர் விவரிக்கின்றார்.
மருந்துகள் வைத்தியர்களினால் கட்டாயமாகப் பரிந்துரைக்கப்பட வேண்டும் எனக்கூறும் அவர், மருந்தைப் பயன்படுத்தும் அளவு, வேளைகள் மற்றும் பயன்படுத்தும் அதிகூடிய காலம் என்பன குறிப்பிடப்படுதல் வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.
இவை பின்பற்றப்படாமல் மருந்து பயன்படுத்தப்பட்டால், அது மருந்தாக அமையாது என்றும், மருந்தை துஷ்பிரயோகம் செய்ததாகப் போய்விடும் எனவும் விளக்கினார்.
உலகளவில் கஞ்சாவை இறக்குமதி செய்யும் நிலை குறைந்து கொண்டு செல்வதாகவும், கஞ்சா சட்டரீதியாக்கப்பட்டுள்ள நாடுகளில் - உளப்பிளவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் றஸாட் கூறுகின்றார்.
துஷ்பிரயோகம் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் என்ன?
இலங்கையில் கஞ்சா தடைசெய்யப்பட்டுள்ள போதும், மருந்து உற்பத்திக்காக கஞ்சாவை பயன்படுத்துவது சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுகிறது. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டில் ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிப்பதற்காக இலங்கையில் 810 கிலோகிராம் கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் மதன மோதகம், காமேஷ்வரி மோதகம் ஆகியவற்றைப் தயாரிப்பதற்காக அதிகளவு கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை - பாலியல் எழுச்சியை ஏற்படுத்துவதற்கான மருந்துகளாகும்.
வரவு - செலவுத் திட்டத்தில் கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிரிடும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், உலகளவில் கஞ்சாவை இறக்குமதி செய்யும் நிலை குறைந்து கொண்டு செல்வதாகவும், கஞ்சா சட்டரீதியாக்கப்பட்டுள்ள நாடுகளில் - உளப்பிளவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் றஸாட் கூறுகின்றார்.
”வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிடப்படும் போது, அது உள்நாட்டில் துஷ்பிரயோகம் செய்யப்படாது என்பதற்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன என்பது பற்றியும் பேசப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இருப்பதை இழந்து விட்டு, இல்லாதது குறித்து யோசிக்கின்றோம்
"உலகளவில் இலங்கைத் தேயிலையின் தரம் உயர்வானது. அதேபோன்று இலங்கை ரப்பரும் உலகளவில் தரமானது. ஆனால் உலக சந்தையில் இவற்றுக்கான இடங்களை நம்மால் தக்க வைக்க முடியவில்லை. நம்மைச் சுற்றிக் கடலினை வைத்துக் கொண்டு - டின் மீன்களை இறக்குமதி செய்யும் நிலையில் நாம் இருக்கின்றோம்.
இதற்குள் கஞ்சாவை ஏற்றுமதி செய்து டாலர்களை சம்பாதிக்க முடியுமா என்கிற கேள்வி பொதுவெளியில் உள்ளது" எனவும் றஸாட் கூறுகின்றார்.
”ஆடை உற்பத்தியில் இலக்கைக்கு இருந்த இடம், தற்போது வங்கதேசத்துக்கு சென்றுள்ளது. ஆடை உற்பத்தித் துறையில் திறனுள்ள பல இலங்கைத் தொழிலாளிகள் வங்கதேசத்துக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வங்கதேசத்திடம் நாம் கடன் வாக்கிக் கொண்டிருக்கின்றோம். இதுதான் நாட்டின் நிலைமை”.
கஞ்சா உற்பத்தி தொடர்பில் பேசும் அரசியல்வாதிகளுக்கு, அது குறித்து இருக்கும் அறிவு என்ன என்கிற கேள்வி பரவலாக உள்ளது எனக் கூறும் றஸாட், 1950ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு சிகரட் வகைகளைக் கொண்டு வருவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அத்தனை விளம்பர உத்திகளும், தற்போது கஞ்சா விடயத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.
இலங்கையில் சிகரட் சட்டரீதியாக்கப்பட்டமையினால் நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றமையினையும், புதைத்தலால் நோயுற்றவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவம் வழங்கப்படுகின்றமையினையும் சுட்டிக்காட்டிப் பேசிய றஸாட், இதேநிலை கஞ்சா விடயத்திலும் உருவாகி விடுமோ என்கிற அச்சம் தனக்கு உள்ளதாகவும் கூறுகின்றார். BBC
கஞ்சா உற்பத்தி, ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கல் பற்றி வரவுசெலவுத்திட்ட உரையில் பேசப்பட்டது. அதன் சாதக பாதகங்கள் பற்றி அந்தத் துறையில் தேர்ச்சியடைந்தவர்கள் கூறும் கருத்துக்களை அரசாங்கம் நுணுக்கமாகக் கருத்தி்ல் எடுக்க வேண்டும். அதன் சாதகங்கள் எப்படிப்போனாலும் கஞ்சாவால் இந்த நாட்டுமக்களுக்கும் நாட்டுக்கும் வரப்போகும் பாரிய ஆபத்துகள் பற்றி விரிவாக அந்த அதிகாரி இங்கு விளக்குகின்றார். அவற்றைச் சரியாக விளங்கி அரசாங்கத்துக்கு விளக்கி வைக்க உரிய அதிகாரிகள் ஆவனம் செலுத்துமாறு பண்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
ReplyDelete