Header Ads



ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபரின் படுகொலை குறித்து, வெளியாகியுள்ள முக்கிய விடயங்கள்


(அததெரன) 


மட்டக்குளிய பிரதேசத்தில் நேற்று மதியம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்வாறு கொல்லப்பட்டவர் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலும் நான்கு சந்தேக நபர்களுடன் ஜாஎல பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


2019 ஆம் ஆண்டில், சந்தேக நபரும் அவரது குழுவும் கைது செய்யப்பட்டபோது, ​​பொலிசார் இரண்டு டெட்டனேட்டர்கள், கிட்டத்தட்ட இரண்டு கிலோ அம்மோனியா, யுத்த ஆடைகளை ஒத்த இரண்டு செட் சீருடைகள் மற்றும் இரண்டு ஜெலட்டின் குச்சிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.


கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்படி விடுவிக்கப்பட்ட மூவரில் ஒருவரே நேற்று (28) மட்டக்குளிய பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளார்.


அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றொரு வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்குச் சென்று திரும்பியபோது அவர் இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அவருக்கு எதிராக பணமோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது.


பணமோசடி தொடர்பாக சந்தேகநபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் உண்டியல் பணப்பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.


வழக்கில் ஆஜரான சந்தேக நபர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவர் வந்த காரை சந்தேக நபரின் கார் பின் தொடர்ந்து வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


விபத்தின் பின்னர் காரில் இருந்து வெளியே வந்த சந்தேகநபர் மீது பின்னால் காரில் வந்த மர்மநபர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எனினும் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

No comments

Powered by Blogger.