பேரணியை தடுத்துநிறுத்திய பொலிஸார் - அடிப்படை உரிமைகளைமீற பொலிஸ் சட்டத்தை பயன்படுத்த வேண்டாமென்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு
மருதானையில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை முன்னெடுக்கப்பட்ட ''அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணியை'' மருதானை ரயில் தலைமையத்திற்கு அருகே இன்று பிற்பகல் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்த எதிர்ப்புப் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என இன்று முற்பகல் கொழும்பு மத்தி இரண்டாம் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், மருதானை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பேரணியை முன்னெடுத்தவர்களை அதிகளவிலான பொலிஸார் இணைந்து தடுப்பதற்கு முயற்சித்தனர். இதன்போது, அமைதியின்மை ஏற்பட்டது.
தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பலவற்றின் பங்குபற்றுதலுடன் மருதானை எல்பின்ஸ்டன் கலையரங்கிற்கு அருகே இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர்கள், பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணி, சுதந்திர மக்கள் சபை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சுமார் 20 அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் சுமார் 150 பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
மருதானை ரயில் தலைமையகத்திற்கு அருகில் பொலிஸார் வீதியை மறித்ததால் பேரணியை முடிவிற்கு கொண்டுவர நேரிட்டது.
எனினும், பேரணியில் கலந்துகொண்ட பலர் தொடர்ந்தும் பேரணியை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
முன்னோக்கி பயணிப்பதற்கு பொலிஸார் இடமளிக்காமையினால், அங்கிருந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர் கலைந்து சென்றனர்.
இதேவேளை, அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாரிடம் இன்று மீண்டும் வலியுறுத்தியது.
அரசியலமைப்பே நாட்டின் உயர்ந்த சட்டம் என்பதை பொலிஸாருக்கு ஞாபகப்படுத்துவதாகக் கூறியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்த தருணத்தில் ஏதேனும் வகையில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால், அது நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment