Header Ads



முஸ்லிம்களுக்குரிய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள், மோசடியான முறையில் விற்பனை


-ஜப்னா முஸ்லிம் இணைய சிறப்பு நிருபர்-

புலிகள் அமைப்பினரால் மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்பொழுது புத்தளம், கம்பஹா, கொழும்பு, கண்டி, களுத்துறை மாவட்டங்களிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான  பல ஆயிரக்கணக்கான ஏக்கர்  விஸ்தீரணம் கொண்ட காணிகள் போலி உறுதிகள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம்  தென்னிலங்கைச்  சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் கொழும்பில்  தலைமையகங்களை  கொண்டுள்ள நிதி நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாக்களுக்கு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் காணி உரிமையாளர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு (CID) பிரிவினருக்கு முறைப்பாடு தெரிவித்த நிலையில் போலி ஆவணங்களை தயார் செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்  சிலர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு,  தற்போது அவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவ்விதம் மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களின் காணிகளை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தி விற்பனை செய்த சிலர் மீது மன்னார் மாவட்ட நீதிமன்றிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


சுமார்  200 வருடங்களுக்கும் மேலாக மன்னார் முஸ்லிம்களுக்கு உறுத்துடைய மன்னார் நகரில் இருந்து தலைமன்னார் பியர் வரையிலான  ஏ- 14 பிரதான வீதியின் இருமருங்கிலும் கடற்கரை வரை காணப்பட்ட  நூற்றுக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட  காணிகளே இவ்விதம் போலி ஆவணங்கள் மூலம்  பல கோடி ருபாக்களுக்கு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மன்னார் மாவட்டத்தில் இருந்து  பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில்  பெரும்பாலனோர்  கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுறும் வரை மன்னார் மாவட்டத்தில் தாம் வாழ்ந்த பூர்விக இடங்களையும், தமக்கும், தமது மூதாதையருக்கும் சொந்தமான தோப்பு, துறவுகளையும் பார்வையிட முடியாத  நிலை காணப்பட்டது. மேலும்  தென்பகுதிகளில் வசிக்கும் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள்  தமது தொழில் துறைகள் மற்றும் வாழ்விடங்களை தென்னிலங்கையிலேயே நிரந்தரமாக அமைத்துக்கொண்ட நிலையில்  வடக்கில் இறுதி யுத்தம் முடிவுற்றும், மன்னாருக்கு வருகை தந்து தமது காணி நிலங்களை பார்வையிடவோ அல்லது பராமரிக்கவோ முற்படவில்லை.


இவ்வாறான நிலையிலே மேற்படி மன்னார் முஸ்லிம் மக்களுக்கு ஆண்டாண்டு காலமாகச் சொந்தமாகக் காணப்பட்ட மிகப் பெறுமதியான காணிகள், போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக அதிக பணத்தொகைக்கு விற்பனை  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையின் தென் பகுதி மாவட்டங்களில் வசித்து வரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களில் அநேகர்,  தமது மூதாதையார்களில் மூலமாக தமக்கு கிடைக்கப்பெற்று கடந்த 90ஆண்டு  வரை குறித்த காணிகளை   ஆட்சி செய்து ஆண்டனுப்பவித்து மன்னாரை விட்டு வெளியேறிய நிலையில், மோசடிக் கும்பலினால்  தமக்கு சொந்தமான குறித்த காணிகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இன்னும் அறியாதுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மன்னார் நகர் தொடக்கம் தலைமன்னார் பியர்வரை தென்னந்தோட்டங்களாகவும், பனம் மரங்கள் அடங்கிய பனம் தோப்புகளாகவும், மரம் முந்திரிகை மற்றும் மாந்தோட்டமாகவும்   காணப்படும் மன்னார் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான குறித்த காணிகளில்  சில,  முன்னைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விக்டோரியா மகாராணியால் 1876 தொடக்கம் இலங்கையின்  பதவியில் இருந்த ஆங்கில தேசாதிபதிகள் ஊடாக மன்னார் முஸ்லிம்களுக்கு  நன்கொடையாக (Gift)  வழங்கப்பட்ட முடிக்குறிய அன்பளிப்பு காணிகளாகும்.


மேலும் மோசடிக் கும்பலினால் சட்டவிரோதமாகப்  போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட காணிகளில் சில  மன்னார் மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட பிரிவிடல் வழக்கு ( Patition Case)  மரணசாசன வழக்குகள் (Testamentary Case) மற்றும்  உயில் (Last Will) உட்பட  சுவீகார சட்டங்களின் கீழான வழக்குகள் மூலம் மன்னார் மாவட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள்  என தீர்ப்பளிக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் இடம்பெயர்ந்து தென்னிலங்கையில் வசிக்கும் மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான மன்னார் பெருநிலப்பரப்பில் உள்ள  வயல் நிலங்களும், மேட்டு நில தோட்டக்காணிகளும், இவ்விதம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளைப்  போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யும்  கும்பல், ஒரு பெரும் வலைப்பின்னலாக செயல்படுவதாகவும், குறித்த கும்பலில் அரசியல் பின்னனி  மற்றும் பண வலிமை உடைய முக்கியஸ்தர்கள் பலர் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


No comments

Powered by Blogger.