வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு எதிர்கொள்ள நேரிடும்
வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் -28- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி
அவர் மேலும் தெரிவிக்கையில், 2022 செப்டெம்பரிலிருந்து இந்த ஆண்டுக்கான மீதமுள்ள காலப்பகுதியிலும், 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலும் மின் உற்பத்திக்குத் தேவையான 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் 38 கப்பல்கள் வர வேண்டும்.
எனினும் இதுவரை 4 கப்பல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஐந்தாவது கப்பல் துறைமுகத்தில் உள்ள சில பிரச்சனைகள் காரணமாக வர தாமதமாகும். இந்த 38 கப்பல்களும் ஏப்ரல் 15ம் திகதிக்குள் கிடைக்காவிட்டால் ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் ஆகிய மாதங்களில் பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படும்.
வரலாற்றில் முதல் மிகப்பெரிய மின்தடையாக இது இருக்கும். அதனால்தான் 2023இல் ஒரு இருட்டு ஜூலை வரலாம் என்று சொல்கிறோம். லக்விஜய மின் உற்பத்தி நிலையம் நாட்டின் மின்சாரத் தேவையில் 45%ஐ வழங்குகிறது.
இப்போது நிலக்கரி கிடைக்கவில்லை என்றால், ஏனைய அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்றால் செலவு மிக அதிகமாக இருக்கும். இலங்கை மின்சார சபை என்ற வகையில் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என நம்புகிறோம்.
இல்லையெனில், பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படும். எந்த வகையிலும் அவசர மின்சாரத்தை வாங்குவதன் மூலம் அந்த மின்வெட்டை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment