"ஆர்ப்பாட்டத்தால்தான் 'ஜனாதிபதி கதிரை'யில் தான் அமர்ந்தார் என்பதை ரணில் மறக்கக்கூடாது"
இலங்கையில் மக்கள் விரும்பிய மாற்றம் இன்னமும் ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
'நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் எதற்கு?ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
"ரணில் - ராஜபக்ச அரசுக்கு எதிரான எமது போராட்டம் - பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்படும். குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பது எமது நோக்கம் அல்ல. அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தவே கோருகின்றோம்.
அடக்குமுறைகள் தொடர்ந்தால் கோட்டாபய ராஜபக்ச போல் ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்கு ஓட வேண்டி வரும். நாட்டு மக்கள் விரும்பிய மாற்றம் இன்னமும் ஏற்படவில்லை.
முன்னர் ராஜபக்ச அரசு ஆட்சியில் இருந்தது. தற்போது ரணில் - ராஜபக்ச அரசு ஆட்சியில் இருக்கின்றது. இதுவா மாற்றம்? இந்த மாற்றத்தையா மக்கள் விரும்பினார்கள்? மக்கள் இன்னமும் கொதிநிலையில்தான் இருக்கின்றார்கள்.
மக்கள் பக்கம் நாமும், எமது பக்கம் மக்களுமாக இருக்கின்றோம். அதேவேளை, ஆர்ப்பாட்டத்தால்தான் 'ஜனாதிபதி கதிரை'யில் தான் அமர்ந்தார் என்பதை ரணில் விக்கிரமசிங்க மறக்கக்கூடாது" என்று கூறினார். tamilw
Post a Comment