இம்ரான்கான் மீது சூடு நடத்தியவர், வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் வெளியிட்ட வீடியோ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியில் சுடப்பட்டார். அவருக்கு வயது 70.
வியாழக்கிழமை மாலை -03- நடந்த இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்திருப்பதாக அவரது பிடிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
"இது அவரைக் கொல்வதற்கான முயற்சி, படுகொலை செய்வதற்கான முயற்சி," என்று அவரது மூத்த உதவியாளர் ஒருவர் ஏ எஃப் பி செய்தி முகமையிடம் கூறினார். ஆனால், அவரைக் குறிவைத்துதான் தாக்குதல் நடந்ததா என்பதை போலீஸ் உறுதிப்படுத்தவில்லை.
இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவர் பிறகு கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தான் ஜியோ டிவி தெரிவிக்கிறது.
இம்ரான் கானை கொல்ல முயன்றவர் என்று கூறி, அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ஒரு வீடியோவை பாகிஸ்தான் போலீஸ் வெளியிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோவில், அந்த நபரிடம் துப்பாக்கி சூடு நடத்தக்காரணம் என்ன என்று போலீசார் கேட்கிறார்கள். அதற்கு அந்த நபர் அளித்த பதில்: "அவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார். அவரை நான் கொல்ல விரும்பினேன். அவரை கொல்ல முயன்றேன்".
கப்பலில் சரக்கு அனுப்ப பயன்படுத்தும் கண்டெயினர் ஒன்றில் உள்ளே இருந்தபடி இம்ரான் கானும் அவரது ஆதரவாளர்களும் பேரணியில் பங்கேற்றனர். அந்த கண்டெயினரை லாரி ஒன்று இழுத்துச் சென்றது. அந்த நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக, சம்பவ இடத்தில் இருந்து வெளியான வீடியோ காட்டுகிறது.
துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அவர் தலை குனிந்துகொள்வதையும், அவர் அருகே இருந்தவர்கள் அவரை சுற்றி சூழ்ந்துகொள்வதையும் வீடியோ காட்டுகிறது.
இன்னொரு வீடியோவில், துப்பாக்கி சூட்டுக்குப் பிறகு சுய நினைவோடு இருக்கும் இம்ரான் கான், தனது வலது காலில் கட்டோடு வேறொரு வண்டியில் அழைத்துச் செல்லப்படுவது தெரிகிறது. அவரது பிடிஐ கட்சி உறுப்பினர் ஒருவரும் முகத்தில் கட்டோடு காணப்படுகிறார். இம்ரான் கானுக்காகவும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்காககவும் அனைவரும் தொழவேண்டும் என்று அந்த நபர் கூறுகிறார். BBC
Post a Comment